பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி எட்டிய கொளக்காநத்தம் அரசுப் பள்ளியின் அவல நிலை: போதுமான கழிப்பிட வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வில் கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளனர்.
ஆனால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் போதிய வகுப்பறைகள் இல்லாமல், மரத்தடியிலும், பெயர்ந்து விழும் மேற்கூரைகள் கொண்ட கட்டிடங்களிலும், கழிப்பறைகள் இல்லாத சூழலில், மிகுந்த மனநெருக்கடிக்கு இடையில் பயின்று, இந்த சாதனையை செய்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை சுமார் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பயின்ற மாணவர்கள் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தேர்ச்சியில் சாதனை புரிந்துள்ள இந்தப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிக அதிகம். இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், பல வகுப்புகள் மரத்தடியில் நடைபெறுகின்றன. இருக்கும் பல வகுப்பறைகளில் மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து, விழுந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான வகுப்பறைகள் ஜன்னல்கள் உடைந்து, கதவுகள் பெயர்ந்து மிகவும் அவல நிலையில் காணப்படுகின்றன. இங்குள்ள கழிப்பறைகள் நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அதுவும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு போதுமான அளவில் இல்லை.
இதுகுறித்து அந்த பள்ளி மாணவர் ஒருவரின் தந்தையான கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “தற்போது பலமாக காற்று வீசுகிறது. அடிக்கடி மழையும் பெய்கிறது. இந்நிலையில் மரத்தடியிலும், மேற்கூரை சேதமடைந்து உடைந்து விழும் கட்டிடத்தின் கீழேயும் பாதுகாப்பற்ற சூழலில் எங்கள் பிள்ளைகள் உயிரை பணயம் வைத்து படித்து வருகின்றனர். நாங்கள் அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்து எங்கள் பிள்ளைகளை அங்கே படிக்க அனுப்புகிறோம். ஆனால், எங்கள் நம்பிக்கையை சிதைக்கும் விதத்தில், அடிப்படை வசதிகள் இன்றியும், போதுமான கட்டிட வசதியின்றியும் இந்த பள்ளி காணப்படுகிறது. எனவே, கொளக்காநத்தம் அரசுப் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி ‘தி இந்து’ விடம் தெரிவித்ததாவது: கொளக்காநத்தம் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட திட்டம் தயாரித்து நிதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள கட்டிடத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
