

மாநகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தனியார் இடத்தில் குப்பை கொட்டப்பட்டிருந்தாலும் அகற்ற வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக உள்ளாட்சிப் பகுதிகளில், பருவ மழையை முன்னிட்டு டெங்கு மற்றும் தொற்று நோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
பொது மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை விநியோகிக்க வேண்டும். குடிநீரில் குளோரின் அளவு குறைந்தபட்சம் 0.2 பிபிஎம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். திறந்த நிலை கிணறுகள் உள்ளிட்ட நீராதாரங்களில் குளோரின் சேர்க்க வேண்டும். குடிநீ்ர் தேக்க தொட்டிகள், மேல் நிலைத் தொட்டிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
மழைநீர் வடிகால்களிலும் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண் டும். கொசு ஒழிப்பு மருந்து சரியான கால இடைவெளியில் தெளிக்க வேண்டும். அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் காலை 6 மணிக்கு அலுவலர்கள் நேரில் சென்று துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். கொசு உற்பத்தி ஆதாரங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
மாநகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள காலி இடங்களில், பொது மக்களால் கொட்டப் பட்டு தேங்கி கிடைக்கும் குப்பைகளை தனியார் இடமாக இருந்தாலும் அப்புறப் படுத்த வேண்டும். கொசு முட்டை, புழுக்களை அழிக்க தேவையான மருந்து கையிருப்பில் இருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களை தொற்று நோய் ஒழிப்பு பணியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.
தொற்று நோய் பரவும் பகுதிகளில் சுகாதார அலுவலர்களுடன் இணைந்து சிறப்பு குழுக்களை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் க.பனீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ், பேரூராட்சிகள் இயக்குநர் கே.மகரபூஷணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்