Published : 11 Apr 2017 04:08 PM
Last Updated : 11 Apr 2017 04:08 PM

தள்ளிப் போகும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

வரும் ஜூன் 5ம் தேதிக்குள் ஆர்.கே.நகருக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என்று சட்ட விதிகள் இருக்கும் சூழ்நிலையில், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்ததை தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி காலியானது.

இதற்கான முறையான அறிக்கையை சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் டிசம்பர் 23ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார்.அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 151 – ன் படி ஒருவர் இறப்பதால் காலியாகும் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். அந்த விதியின்படி ஜூன் 5ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் இடையே கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனைகள் நடைபெற்றன. பல்வேறு காரணங்களால் அடுத்த 6 மாதத்திற்குள் ஆர்.கே.நகருக்கு தேர்தல் நடத்த முடியாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் ஜூலை மாதம் தேதி குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகளில் தேர்தல் ஆணையம் இந்த மாத இறுதியில் தீவிரமாக இறங்க உள்ள நிலையிலும், அடுத்த 6 மாதங்களுக்கு இடைத்தேர்தல்கள் எதுவும் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் நடைபெறாத நிலையிலும், ஆர் கே நகருக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக சட்டப்பிரிவு 151 உட்பிரிவு (அ) வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்தி மத்திய அரசிடம் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவும், உச்சநீதிமன்றத்தை அணுகி சட்ட விளக்கம் கோரவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x