பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மறைவுக்கு முதல்வர் இரங்கல்
Updated on
1 min read

தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மறைவுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: "பிரபல தொழில் அதிபரும், இராமலிங்க அடிகளார் தொண்டரும், சிறந்த காந்தியவாதியுமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் 2.10.2014 அன்று சென்னையில் காந்தி - வள்ளலார் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வழியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் சக்தி குழும நிறுவனங்களின் தலைவராயிருந்து எண்ணற்ற நிறுவனங்களை தனது கடும் உழைப்பால் உருவாக்கி பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்ததோடு பல இளம் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டியாகவும், உந்து சக்தியாகவும், ஊக்க சக்தியாகவும் விளங்கியவர்."ஓம் சக்தி" என்ற பெயரில் ஆன்மிக இதழை நடத்தி மக்களிடையே ஆன்மிக உணர்வையும், அறிவியல் உணர்வையும் ஒரு சேர வளர்த்தவர்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக மூன்று முறை திறம்பட மக்கள் பணியாற்றியுள்ளார். காந்தியத்தை வாழ்வின் லட்சியமாகக் கொண்டு தனது இறுதி மூச்சு வரை காந்திய பாதையிலேயே பயணித்து, வள்ளலார் காட்டிய நெறியில் வாழ்ந்து மறைந்துள்ளார்.

வள்ளலார் மார்க்கமான சமரச சுத்த சன்மார்க்கத்துக்காக பல அளப்பரிய பணிகளை ஆற்றி அவர் வழியில் ஏழை, எளிய மக்கள் மீது அன்பு காட்டியுள்ளார். பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்கள் பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார்.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள், காந்திய வழியிலும், வள்ளலார் காட்டிய நெறியிலும் வாழ்ந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் மீது அளப்பறிய அன்பும், பாசமும் கொண்டிருந்தார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்கள், தமிழக சட்டமன்ற பேரவை வைர விழாவின் போது, முதல் சட்டமன்ற பேரவை உறுப்பினராக விளங்கி மக்கள் பணியாற்றிய பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களை கௌரவித்தார்கள்.

பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in