Published : 12 Oct 2014 12:14 PM
Last Updated : 12 Oct 2014 12:14 PM

சித்த மருத்துவம், ஓமியோபதி படிப்புக்கான கலந்தாய்வு: அக்.17-ம் தேதி தொடங்குகிறது

சித்த மருத்துவம், ஓமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 17-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2014-2015-ம் கல்வி ஆண்டுக்கான பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறும். சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்.

கலந்தாய்வு குறித்து சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தனித்தனியே குறுந்தகவல் செய்தியும் (செல்போன் எஸ்எம்எஸ்) அனுப்பப்படும். அழைப்புக்கடிதம் கிடைக்கப்பெறாத மாணவர்கள் தமிழக அரசு சுகாதாரத்துறையின் இணையதளத்தில் (www.tnhealth.org) தங்கள் விண்ணப்ப பதிவுஎண்ணை குறிப்பிட்டும் அழைப்புக்கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அவர்களுக்குரிய கட் ஆப் மதிப்பெண்ணுக்கு ஏற்ப குறிப்பிட்ட நாள் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.கலந்தாய்வுக்கு வரும்போது, அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள் அல்லது தற்போது படித்து வரும் கல்லூரியிலிருந்து ஆளறிச் சான்றிதழையும் (Bonafide Certificate), தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பெறப்பட்ட ரூ.5,500-க்கான டிமாண்ட் டிராப்டையும் (“Director of Indian Medicine and Homeopathy, Chennai-106”) கொண்டுவர வேண்டும்.

கலந்தாய்வு மேற்குறிப்பிட்ட நாட்களில் காலையில் 7 மணிக்கும் மதியம் 1 மணிக்கும் தொடங்கும். கலந்தாய்வு தேதி, கட் ஆப் மார்க் உள்ளிட்ட விவரங்களை மேற்சொன்ன இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x