Last Updated : 11 Feb, 2014 12:00 AM

 

Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM

உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தமிழகத்தில் பல லட்சம் கட்டிடங்களுக்கு ஆபத்து?

சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால், தமிழகத்தில் விதிமுறை மீறி கட்டப்பட்ட பல லட்சம் கட்டிடங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டப்பட் டிருந்த பல லட்சம் விதிமீறல் கட்டிடங்களுக்கு அங்கீகார மளிக்கும் வகையில், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புத் துறை சட்டத்தில் (1998) திருத்தங்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, கட்டிடங்களில் செய்யப்பட் டிருக்கும் விதிமீறல்களுக்கு ஏற்ப, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், மற்றும் மாநகராட்சிகள், நகராட்சிகளை அணுகி ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி அதை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று 1999-ல் அரசு அறிவித்தது.

அதன்பிறகு, சென்னையில் பல ஆயிரம் வீடு மற்றும் கட்டிடங்களின் உரிமையாளர்கள், மாநகராட்சியிலும், சிஎம்டிஏ-விலும், வரன்முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ், அரசு நிர்ணயித்த தொகையைச் செலுத்தினர்.

இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து 2000 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும் இந்த வரன்முறை திட்டம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், 1999-ம் ஆண்டு பிப்ரவரிக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் மட்டுமே வரன் முறைப்படுத்தப்பட வேண்டும் என 2006-ல் உத்தரவிட்டது. அதன்பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, சென்னையில் பல்வேறு துறைகளின் அதிகாரிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் பணித்தது. அக்குழுவின் உத்தரவின் பேரில் சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டன (தற்போது இடிப்பதற்கு பதில் சீல் வைக்கப்படுகிறது). இதனால் வரன்முறை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த ஏராளமானோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர எல்லைக்குள் ஜூலை 7, 2007-க்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் ஒரு அவசரச் சட்டத்தை அரசு பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டம் 2009 வரை 3 முறை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே, விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக முடிவெடுக்க 2007-ல் அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் குழு, அரசுக்கு சில பரிந்துரைகளை 2010-ல் அளித்தது. இதனை ஏற்று, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு வரன்முறைத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.

இதற்காக கடந்த 30.10.2012 அன்று தமிழக அரசு 2 அரசாணைகளை வெளியிட்டது. அதன்படி, 1.7.2007 வரை விதிமுறைகளுக்கு மாறாகக் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது மற்றும் பல வழிமுறைகள் அந்த அரசாணைகளில் கூறப்பட்டிருந்தன. இதனை எதிர்த்து, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மேற்கண்ட அரசாணைகளை ரத்து செய்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இதனால், விதிகளை மீறி கட்டிடங்களைக் கட்டிய பல லட்சம் வீடுகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x