Published : 21 Jan 2014 12:00 AM
Last Updated : 21 Jan 2014 12:00 AM

இன்று 47-வது ஆண்டை கடக்கும் அண்ணா நகர் பூங்கா கோபுரம்

நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்களை கவர்ந்து வரும், சென்னை அண்ணா நகர் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்காவில் உள்ள 138 அடி உயர கோபுரம் 46-வது ஆண்டைக் கடந்து 47-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

சென்னை, அண்ணா நகர் என்றால் அனைவரின் நினைவிலும் வருவது, அண்ணா பவள விழா நினைவு வளைவு, டாக்டர் விஸ்வேஸ்வரய்யா கோபுர பூங்கா.

டாக்டர் விஸ்வேஸ்வரய்யா கோபுர பூங்கா, அண்ணா நகரின் மையப் பகுதியில் 15.5 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. மரங்கள், குளம், பச்சை பசேல் செடிகள், வண்ணப் பூச்செடிகள், புல்தரைகள், கலையரங்கம், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், பொதுமக்கள் அமரும் வகையிலான இருக்கைகள் அமைக்கப்பட்டு சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் இப் பூங்கா, அண்ணா நகர் பகுதி வாசிகளின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்கி வருகிறது.

பம்பாய் மாகாண பொறியாளராகவும், மைசூர் அரசின் திவானாகவும் விளங்கிய டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பெயர் சூட்டப்பட்ட இந்த கோபுரம் 138 அடி உயரம் மற்றும் 42 மீட்டர் அகலம் கொண்டது.

1968- ம் ஆண்டு சென்னை அண்ணா நகரில் நடந்த இந்திய- சர்வதேச தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சியை முன்னிட்டு, 1968-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி இது திறக்கப்பட்டது. அப்போதைய குடியரசு துணைத் தலைவர் வி.வி.கிரி, தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரை, ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங், தொழில் அமைச்சர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் டாக்டர். விஸ்வேஸ்வரய்யா கோபுர பூங்காவின் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

இந்த கோபுரத்தின் உச்சியில் நின்று, மரங்கள் நிறைந்த அண்ணா நகரை முழுமையாக பார்த்து ரசிக்க முடியும். அத்தகைய சிறப்பு பெற்ற டாக்டர். விஸ்வேஸ்வரய்யா கோபுரம், செவ்வாய்க்கிழமை (இன்று) 46 வயதை நிறைவு செய்கிறது.

ஆனால், எவ்வித ஆரவாரமும் இன்றி, மெல்லிய இசையை பரப்பியவாறு, பூங்காவையும் தன்னையும் ரசிக்க நாள்தோறும் நூற்றுக்கணக்கில் வரும் அனைத்து தரப்பினரையும் ரசித்துக் கொண்டு நிற்கிறது டாக்டர் விஸ்வேஸ்வரய்யா கோபுரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x