

நீதிமன்றத் தீர்ப்புகளை மதித்து முன்னுதாரணமாக இருக்க வேண்டிய, மத்திய - மாநில அரசுகள், அதற்கு மாறான முறையில் செயல்படுவது கண்டனத்துக்குரியது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மத்திய - மாநில அரசுகள் தந்திரமான முறையில் மீறுவது கண்டனத்திற்குரியது. உச்ச நீதிமன்ற உத்திரவின்படிதான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அதன் இறுதி தீர்ப்பு வெளியாகி, அதன்பின்னர் ஏழு ஆண்டுகால தாமதத்திற்கு பின்னர் மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு மத்திய அரசு அமைக்காத காரணத்தால், உச்ச நீதி மன்றம் தலையிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது அவ்வாறு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வாதிட்டதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று அமல்படுத்திட மத்திய அரசு அதனைச் செய்யாமல், மிக தந்திரமான முறையில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றங்களை எல்லாம் கலைத்து விட்டு, தேசிய நதிநீர் ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்திருப்பது உச்ச நீதி மன்ற தீர்ப்பை அவமதிக்கக் கூடிய செயல் மட்டுமல்ல, தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகச் செயலாகும். இத்தகைய செயலை மத்திய அரசு கைவிட வேண்டும்.
அதனைப் போன்று, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று தொடர்ந்து கோரப்பட்டு வருகின்றது. அதிமுக அரசு படிப்படியாக குறைக்கப்படும் என்று தெரிவித்து, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 500 கடைகள் மூடப்பட்டன. தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றவுடன் 500 மதுபானக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று அமல்படுத்திட வேண்டிய மாநில அரசுகள் மிக தந்திரமான முறையில் மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட சாலைகளாக வகை மாற்றம் செய்து மதுபானக் கடைகளை நிரந்தரமாக நடத்திடவும், அதே போன்று தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை இடம் மாற்றி அமைக்கவும் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள், நீதி மன்ற தீர்ப்புகளை நிராகரிக்கும் செயலாகும். இத்தகைய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று கோருகின்றோம்.
நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்துவதற்கு மாறாக தந்திரமான முறையில் தவிர்க்க மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புகளை மதித்து முன்னுதாரணமாக இருக்க வேண்டிய, மத்திய - மாநில அரசுகள், அதற்கு மாறான முறையில் செயல்படுவது, நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை அவநம்பிக்கையாக மாறும்.
மத்திய, மாநில அரசுகள் தங்களின் தவறான போக்குகளை கைவிட வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.