

திருச்செந்தூர் கடலில் எண்ணெய் போன்ற ரசாயனக் கழிவு மிதப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகேயுள்ள கடல் பகுதியில், தினமும் ஏராளமான பக்தர்கள் நீராடி, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று காலை கடலில் குளிக்க வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த பகுதி முழுவதும் எண்ணெய் போன்ற ரசாயனக் கழிவு மிதந்தது. இதனால் பக்தர்கள் நாழிக்கிணற்றில் மட்டும் குளித்து விட்டு சுவாமி தரிசனம் செய்தனர். கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய், அலையில் அடித்து வரப்பட்டதா அல்லது அருகேயுள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கழிவா? எனத் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.