

கரூர் வைஸ்யா வங்கி மத்திய அலுவலகத்தில், ‘சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் மாற்றுதல் மற்றும் சில்லறை நாணயங் கள் விநியோக மேளா’ சனிக்கிழமை நடைபெற்றது. வங்கி மேலாண்மை இயக்குநர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். இந்திய ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் நீதிராகவன், கரூர் வைஸ்யா வங்கி முதன்மைச் செயல் அலுவலர் வி.கிருஷ்ணசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் ஜெ.சதக்கத்துல்லா மேளாவைத் தொடங்கிவைத்துப் பேசியது:
ரிசர்வ் வங்கி இரண்டு கொள்கைகளை முன்னிறுத்தி செயல்படுகிறது. கிழிந்த, அழுக்கேறிய ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து அகற்றி, நல்ல ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திற்கு கொண்டுவருவது மற்றும் சில்லறைத் தட்டுப்பாட்டை நீக்குவது. இதன் முன்னோடித் திட்டமாக கரூர் மாவட்டத் தைத் தேர்ந்தெடுத்து தூய்மையான ரூபாய் நோட்டுகள் உள்ள (கிளீன் கரன்சி) மாவட்டமாக மாற்ற முயற்சி எடுத்துள்ளோம். இதற்காக கரூர் வைஸ்யா வங்கியை முன்னோடி வங்கியாக நியமித்து அதன்மூலம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். ரிசர்வ் வங்கி மூலம் மாவட்ட அளவிலான அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய, கிழிந்த, அழுக்கேறிய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மற்ற வங்கிகளின் ஒத்துழைப்புடன் முயற்சிகளை மேற்கொள்வார்.
இதற்காக மாவட்ட கரன்சி ஒருங்கிணைப்பு கூட்டம் அவ்வப்போது நடத்தப்படும். கரூர் வைஸ்யா வங்கிக்கு புது ரூபாய் நோட்டுகள், சில்லறைகள் ரிசர்வ் வங்கி மூலம் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும். கரூர் வைஸ்யா வங்கி மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள மற்ற வங்கி கிளைகளுக்கு புது ரூபாய் நோட்டுகள், சில்லறைகள் அனுப்பிவைக்கப்படும். இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் படிப்படியாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழைய, கிழிந்த, அழுக்கேறிய ரூபாய் நோட்டுகள் அகற்றப்பட்டு அனைத்து ரூபாய் நோட்டுகளும் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றப்படும் என்றார்.
இந்தியாவில் விரைவில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் வரப்போகின்றன. நாட்டில் ரூ.12 லட்சம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
ஏடிஎம் இயந்திரம் போல சில்லறை நாணயங்களை வழங்கும் இயந்திரம் விரைவில் கொண்டு வர வணிக வங்கிகள் மூலம் முயற்சி மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் 150 சில்லறை வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும். சென்னையில் 50 இயந்திரங்கள் நிறுவப்படும் என்றார்.