

தாமிரபரணி தண்ணீரை பெப்சி, கோக் குளிர்பான ஆலைகளுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் இளைஞர் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட அமைப்பாளர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன் ஆகியோர் பேசினர். ராஜ்குமார், சுபாஷ், ராமலிங்கம் உள்ளிட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
மனித சங்கிலி
பெப்சி, கோக் ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்க போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் கல்லிடைக்குறிச்சியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்று பாலத்தில் நடந்த போராட்டத்துக்கு எஸ்டிபிஐ அம்பை தொகுதி தலைவர் எம்.கே. பீர்மஸ்தான் தலைமை வகித்தார். செயலாளர் சுலைமான், மாவட்ட வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் முகம்மது ஷபி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதம்
தாமிரபரணி ஆற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி உலக இளைஞர் அமைப்பு சார்பில் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாணவர் சுபி தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் 6 இளைஞர்கள் பங்கேற்றனர்.