Published : 28 Dec 2013 03:09 PM
Last Updated : 28 Dec 2013 03:09 PM

பாம்பன் பாலம் நூற்றாண்டு கொண்டாட்டம்: ஐந்து நாள் நடைபெறுகிறது

பாம்பன் ரயில்வே பாலத்திற்கு நூற்றாண்டு விழா 2014 பிப்ரவரி மாதம் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ரஸ்தோகி தெரிவித்துள்ளார்.

பாம்பன் பாலம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப்பு கடற்பகுதிகளில் இந்தியாவோடு ராமேஸ்வரம் தீவை இணைக்கிறது.

இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கடல் பாலம் இதுதான். இந்த பாம்பன் பாலம் 2.3 கி.மீ. நீளம் கொண்டது. மேலும் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும்.

கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் இந்த ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேய என்ஜினீயர் ஸ்கெர்சர் கட்டியதால் இந்த ரெயில் பாலத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.

1964–ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய புயலில் துறைமுக நகரமான தனுஸ்கோடி முற்றிலும் அழிந்தது. அதனைத் தொடர்ந்து பாம்பன் பாலத்தின் சில பகுதிகள் சேதம் மடைந்தன.

அத்தருணத்தில் என்ஜினீயர் ஸ்ரீதரன் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு சில மாதங்களிலேயே பாலத்தை சீரமைத்து மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது.

பின்னர் 2006 ஆம் ஆண்டு 92 ஆண்டுகள் கழித்து மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்த பாம்பன் பாலம் ரயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி துவங்கியது.

இதனால் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் மீண்டும் 2007 ஆம் ஆண்டு மீண்டும் அகல ரயில் பாதையாக பாம்பன் ரயில்வே பாலம் மாற்றப்பட்டு மீண்டும் ரயில்வே போக்குவரத்து துவங்கியது.

பாம்பன் பாலம் கட்டப்பட்டு 1914 ஆண்டு தனுஸ்கோடிக்கு ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி நூறு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் தெற்கு ரயில்வே பிப்ரவரி 24, 2014 அன்று பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா மண்டபம் மற்றும் பாம்பனில் நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்நிலையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ரஸ்தோகி நூற்றாண்டு விழா நடைபெற உள்ள மண்டபம் மற்றும் பாம்பன் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பாரம்பரியமான பாம்பன் ரயில்பாலம் பயன்பாட்டிற்கு வந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து பாம்பன் பாலத்திற்கு பிப்ரவரி 24, 2014 அன்று நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற உள்ளது.

பாம்பன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தபால் தலை வெளியிடப்படும். மேலும் புகைப்பட கண்காட்சி, மருத்துவ முகாம் என, ஐந்து நாட்கள் தொடர்ந்து விழா நடைபெறும்.

இதில் பாம்பன் ரயில் பாலத்தை அகலப்பாதையாக மாற்ற முக்கிய காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 1964ல் தனுஸ்கோடியை தாக்கிய புயலில் பாம்பன் பாலம் சேதமடைந்த போது சிறப்பாக சீரமைத்துக் கொடுத்த இன்ஜினியர் ஸ்ரீதரனும் முக்கிய விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர். மேலும் தமிழக முதல்வருக்கும், மத்திய ரயில்வே அமைச்சரையும் விழாவிற்கு அழைத்துள்ளோம்.

பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா அத்தருணத்தில் பாம்பன் ரயில் பாலத்தில் ரயிலில் பயணிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தனது ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே பாம்பன் பாலம் நூற்றாண்டு விழா அன்று மண்டபத்தில் இருந்து பாம்பனுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பாம்பனில் நூற்றாண்டு நினைவு தூணின் அடிக்கல் கல் நடப்படும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x