Published : 07 Jul 2016 10:35 AM
Last Updated : 07 Jul 2016 10:35 AM

மழைநீர் வடிகாலில் கழிவுநீரை விடும் குடிநீர் வாரியம்: சென்னை புளியந்தோப்பில் பொதுமக்கள் அவதி

சென்னை மாநகராட்சியால் கட்டமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய்களில் சென்னை குடிநீர் வாரியம் விதிகளை மீறி கழிவுநீரை விட்டு வருகிறது. இதனால் புளியந்தோப்பு காந்திநகரைச் சேர்ந்த மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னையில் கழிவுநீர் குழாய் களில் விடப்படும் வீடுகளின் கழிவுநீர், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப் பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கு சுத்திகரிக்கப்பட்டு வெளியில் விடப்படுகிறது. மழைக் காலங் களில் பெய்யும் மழைநீர், சாலை களில் தேங்காமல் இருப்பதற் காக சாலையோரங்களில் மழைநீர் வடிகால்வாய்கள் கட்டப்பட் டுள்ளன. இதில் கழிவுநீரை விட அனுமதி இல்லை.

ஆனால் சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான சில கழிவுநீர் லாரிகள், புளியந்தோப்பு பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாலையில், விதிகளை மீறி மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீரை விட்டு வருகிறது.

இது தொடர்பாக புளியந் தோப்பு காந்திநகரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “இப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில், கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டால், அங்கு சென்னை குடிநீர் வாரிய லாரி களால் உறிஞ்சப்படும் கழிவுநீர், எங்கள் குடியிருப்புக்கு மிக அருகில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் விடப்படுகிறது. இந்த கழிவுநீரை கொடுங்கை யூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்குதான் கொண்டு செல்ல வேண்டும். இது லாரி ஓட்டுநருக்கும், மாநகராட்சி வார்டு 72-ன் பொறியாளருக்கும், குடிநீர் வாரிய பொறியாளருக்கும் நன்றாகவே தெரியும். இருந் தும் இந்த நீரை மழைநீர் வடிகால் வாயில் கொட்ட அனுமதிக்கப் படுகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் தொடர்ந்து துர்நாற் றம் வீசுவதுடன், கொசுத் தொல் லையும் இருந்து வருகிறது. இங்கு வசிப்பவர்கள் இதனால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

மாநகராட்சிக்கு சிக்கல்

கழிவுநீர் குழாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டால், ஆள்நுழை வாயில்களில் (மேன்ஹோல்) ஆட்களை இறக்கி வேலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், மழைநீர் வடிகால், கழிவுநீர் குழாய்கள் ஆகியவற்றுக்கு உள்ள வித்தியாசங்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கி, மழைநீர் வடிகால்களில் தூர் வார ஆட்களை இறக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

இந்த வழக்கில், கழிவுநீர் குழாய்களில் உள்ளது போன்று நச்சு வாயுக்கள், மனிதக் கழிவு கள் ஆகியவை மழைநீர் வடிகால் வாயில் இல்லை. மேலும் சட்ட விரோதமாக மழைநீர் வடிகால் வாய்களில் கழிவுநீர் குழாய்கள் இணைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்து, அவற்றை துண்டிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக செய்து வருவதாக வாதிட்டு, மழைநீர் வடிகால்வாய் களை தூர் வார உயர் நீதிமன் றத்திடம் அனுமதி கேட்டு வருவ தாக, மேயர் சைதை துரைசாமி, கடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை குடிநீர் வாரியத்தின் இந்த நடவடிக் கையால், மழைநீர் வடிகால் வாயில் உள்ள ஆள்நுழைவாயிலில் ஆட் களை இறக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் முயற்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, மழை நீர் வடிகாலில் கழிவுநீர் விடப் படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x