

தமிழக விவசாயிகளுக்கு ராயல்டி தருவதாகக் கூறி, துரப்பண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் திருவாரூர் கோ.வரதராஜன் வெளி யிட்டுள்ள அறிக்கை: திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் போன்ற காவிரிப் படுகை மாவட்டங்களில் தொடர் வறட்சியின் காரணமாக தற்கொலை, அதிர்ச்சி மரணங்களால் விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். காவிரி நீரை பெற்றுத் தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், இந்தப் பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளால் நிலத்தடி நீராதாரம் பாதித்துள்ளதைக் கண்டித்தும் மக்கள் இயக்கங்கள், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதை கருத்தில்கொள்ளாத மத்திய அரசு, மக்கள் விருப்பத்துக்கு மாறாக தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.
இதற்கும் எதிர்ப்பு கிளம்பி யுள்ள நிலையில், மன்னார்குடியில் சேம்பர் ஆப் அக்ரிகல்ச்சர் என்ற அமைப்பு, கச்சா எண்ணெய் எடுப்பதாலும், எரிவாயு எடுப்ப தாலும் இந்த பகுதியில் பாதிப்பு இல்லை என்ற பொய்யான ஒரு தகவலைக் கூறி, விவசாயிகளுக்கு ராயல்டி கொடுத்தால் திட்டங்களை நிறைவேற்றலாம் என்ற கருத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது. இதன் பின்னணியில் மத்திய அரசும், பாஜகவினரும் உள்ளனர்.
இப்படிப்பட்ட கருத்துகளை வெளியிட்டு, தமிழகத்தை அழிக்க நினைக்கும் திட்டங்களை கொல்லைப்புறமாக அமல்படுத்த முயற்சிப்பவர்கள் குறித்து மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.