Published : 21 Oct 2013 08:41 PM
Last Updated : 21 Oct 2013 08:41 PM

கூடங்குளம் புதிய அணு உலைகள்: சிக்கல்களை விரைந்து களைய மன்மோகன் சிங், புதின் உத்தரவு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-வது அணு உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் உள்ள சிக்கல்களை விரைவில் தீர்க்குமாறு, அதிகாரிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், ரஷ்ய அதிபர் புதினும் உத்தரவிட்டுள்ளனர்.

ரஷ்ய பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று (திங்கள்கிழமை) அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகள், ராக்கெட், ஏவுகணை உள்ளிட்ட ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து பேசினர். மேலும், பயங்கரவாதம் உள்ளிட்ட விவகாரங்கள், வர்த்தக மற்றும் முதலீட்டு அம்சங்கள் குறித்தும் அவர் விவாதித்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பின் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “2010-ல் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து அதிபர் புதினிடம் உறுதியளித்தேன்.

இரு நாடுகளின் நட்புறவுக்கு தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின் நிலையம் அடையாளமாகத் திகழ்கிறது. கூடங்குளத்தில் 1-வது அணு உலையில் மின் உற்பத்தி விரைவில் தொடங்கிவிடும். 2-வது அணு உலையில் அடுத்த ஆண்டு பணிகள் தொடங்கும்.

புதிய அணு உலைகள் தொடர்பாக நிலுவையில் உள்ள சிக்கல்களை கூடிய விரைவில் களைவதற்காக, அதிகாரிகளுக்கு நாங்கள் இருவரும் உத்தரவிட்டுள்ளோம்” என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

சிக்கல் நீடிப்பது ஏன்?

மாஸ்கோவில் நடைபெறும் இந்திய - ரஷ்ய 14-வது உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விடுத்த அழைப்பை ஏற்று மன்மோகன் சிங் மாஸ்கோ சென்றுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக டெல்லியிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றார். இந்தப் பயணத்தின்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-வது அணுஉலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்று மாஸ்கோ வட்டாரங்கள் தெரிவித்தன.

அணு உலை விபத்து இழப்பீடு விவகாரத்தால் கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப் பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண விபத்து காப்பீடு எடுத்துக் கொள்ளலாம் என்று இந்திய தரப்பில் யோசனை தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி, புதிய விபத்து காப்பீடு பாலிசியை வரையறுக்குமாறு பொதுத்துறை நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தி டம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுபோல் பல்வேறு சம ரச நடவடிக்கைகளுக்குப் பிறகும் இருதரப்பிலும் இதுவரை உறுதியான முடிவு எட்டப்படவில்லை. இதுகுறித்து ரஷ்ய அரசு வட்டாரங்கள் கூறும்போது, கூடங்குளம் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை மிகவும் நெருங்கி வந்துவிட்டோம். ஆனால், அணுஉலை விபத்து இழப்பீடு விவகாரத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருதரப்பு வழக்கறிஞர்களும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் சுமுக உடன்பாடு எட்டப் படும்வரை காத்திருக்க முடிவு செய்துள்ளோம் என்றன.

கூடங்குளம் ஒப்பந்தம், இந்தியாவின் அணுமின் கழகம் (என்.பி.சி.ஐ.எல்.), ரஷ்யாவின் ரோசாடாம் நிறுவனங்களுக்கு இடையிலான வணிக ஒப்பந்தம். எனவே, பிரதமர் மன்மோகன் சிங்கின் பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பில்லை, தனிப்பட்ட முறையிலேயே ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருநிறுவனங்களும் விரும்புகின்றன என்றும் ரஷ்ய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x