

சென்னை கிரீன்வேஸ் சாலை யில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் நிருபர்களிடம் நத்தம் விஸ்வநாதன் கூறிய தாவது:
திமுகவுடன் எங்களுக்கு உறவு கிடையாது. சசிகலா தான் திமுகவுடன் உறவு வைத் திருந்தார். அதற்கு உதாரணம் மிடாஸ் நிறுவனம். திமுக ஆட்சிக் காலத்தில் மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து மது வாங்கினார்கள். ஜெயலலிதாவுக்கு மிடாஸ் நிறுவனம் பிடிக்காது. ஆனால், சசிகலா அந்த மிடாஸ் நிறுவனம் மூலம் பணம் சம்பாதித்தார்.
தற்போது அவர்களிடம் அதிக எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறுகின்றீர்கள். இந்த எண்ணிக்கை விரைவில் சரியாகி விடும். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் லேட்டாக முடிவெடுத்தாலும் லேட்டஸ்ட்டாக எடுத்துள்ளார். அவர் எடுத்த முடிவு நல்ல முடிவு. அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். 131 எம்எல்ஏக்கள் ஆதரவு பெரிய விஷயமல்ல. யாருக்கு மக்களிடம், தொண்டர் களிடம் செல்வாக்கு இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் நீலகண்டன், ராஜலட்சுமி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோரும் நேரில் வந்து பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மாலை 6.30 மணியளவில் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ மனோரஞ்சிதம், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியுடன் வந்து ஆதரவு தெரிவித்தார். வாசுதேவநல்லூர் தொகுதி எம்எல்ஏ மனோகரனும் தனது ஆதரவை தெரிவித்தார்.
முதல்வர் பன்னீர்செல்வம், முனுசாமி, முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் வீட்டுக்கு வெளியே திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கைகூப்பி நன்றி தெரிவித்தார். அவர்களிடம் பன்னீர்செல்வம் கூறும்போது, ‘‘ஜெயலலிதா அமைத்துக் கொடுத்துள்ள அரசு நல்ல அரசு. இது தொடர்ந்து 4 ஆண்டுகள் நடப்பதற்கான நல்ல சூழ்நிலை உருவாகியுள்ளது. நல்லாட்சி வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பம் நிறைவேறும் வகையில் நல்ல சூழல் உருவாகியுள்ளது’’ என்றார்.
பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவ்வப்போது முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டை விட்டு வெளியே வந்து தொண்டர்களைப் பார்த்து நன்றி தெரிவித்தார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.