

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சுமார் 5 மணி நேரம் அளித்த சாட்சியம் இன்று (திங்கள்கிழமை) பதிவு செய்யப்பட்டது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில், தயாளு அம்மாள் சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியத்தை நீதிபதி கோபாலன் பதிவு செய்தார். காலை சுமார் 9.50 மணிக்குத் தொடங்கிய சாட்சியம் பதிவு செய்யும் நடவடிக்கைகள் பிற்பகல் 3 மணி வரை நீடித்தன.
இந்த விசாரணையின்போது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் சரத் ரெட்டி ஆகியோரும் ஆஜரானார்கள்.
விசாரணையில் கலந்துகொண்ட சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் கே.கே.கோயல், தயாளு அம்மாள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். தயாளு அம்மாளிடம் பெறப்பட்ட சாட்சியம், டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
தாயாளு அம்மாளிடம் நடத்தப்பட்ட இந்த விசாரணையின் காரணமாக கோபாலபுரத்தில் அவரது வீடு அமைந்துள்ள பகுதி இன்று காலை முதலே பரபரப்பாகக் காணப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டு விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ரூ.200 கோடி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் என்ற முறையில் சாட்சியம் அளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தயாளு அம்மாளுக்கு சம்மன் அனுப்பியது.
ஆனால், டெல்லிக்கு பயணம் செய்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் நிலையில் தயாளு அம்மாளின் உடல் நிலை இல்லை என்றும், ஆகவே நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து தயாளு அம்மாளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி அவரது மகள் செல்வி மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து தயாளு அம்மாளின் உடல் நிலை குறித்து டாக்டர்கள் பரிசோதனை நடத்த சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் சென்னை வந்து தயாளு அம்மாளின் உடல் நிலை குறித்து பரிசோதித்தனர்.
அவர்கள் அளித்த மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் சென்னையிலேயே தயாளு அம்மாள் சாட்சியம் அளிக்கலாம் என்றும், சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி எம்.கோபாலன் தயாளு அம்மாள் வீட்டுக்குச் சென்று அவரது சாட்சியத்தை பதிவு செய்யுமாறும் சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.