Last Updated : 26 Dec, 2013 12:00 AM

 

Published : 26 Dec 2013 12:00 AM
Last Updated : 26 Dec 2013 12:00 AM

சோழிங்கநல்லூரில் 904 வீடுகளுக்கு நிபந்தனையை தளர்த்தி விற்பனை பத்திரம்

சோழிங்கநல்லூரில், நில வங்கி இடத்தில் கட்டப்பட்ட 904 அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு நிபந்தனை களைத் தளர்த்தி பிப்ரவரிக்குள் விற்பனைப் பத்திரத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வழங்க உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு விற்பனைப் பத்திரம் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்டம் சார்பில் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு சுயநிதித் திட்டத்தின் கீழ் சோழிங்கநல்லூரில் 904 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. 444 சதுர அடி முதல் 468 சதுர அடி கொண்ட ஒரு படுக்கையறை வீடுகள் முறையே ரூ.9.89 லட்சத்துக்கும், ரூ.10.66 லட்சத்துக்கும் விற்கப்பட்டன.

10 ஆண்டு நிபந்தனை

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட ஒதுக்கீடுதாரர் களுக்கு 2009-ம் ஆண்டு வீடுகள் வழங்கப்பட்டன. குறைவானவர்கள் மட்டுமே ரொக்கம் கொடுத்து வீடு வாங்கினர். மற்ற அனை வரும் வங்கிகளில் கடன் வாங்கித்தான் வீடு வாங்கினர். அவ்வாறு வாங்கும்போது, 10 ஆண்டுகளுக்குப் பிறகே ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனைப் பத்திரம் (கிரயப் பத்திரம்) வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், 10 ஆண்டுகள் என்ற நிபந்தனையைத் தளர்த்தி விற்பனைப் பத்திரத்தை வழங்கவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி மாதத்துக்குள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு வீடு மற்றும் மனையை அடக்க விலையில் வழங்குவதற்காக நில வங்கி ஏற்படுத்தப்பட்டது. சோழிங்கநல்லூரில் 904 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள இடம், நில வங்கியில் இருந்த கடைசி இடமாகும். நில வங்கியில் வீடு கட்டிக் கொடுக்கும்போது 10 ஆண்டுகள் கழித்துத்தான் கிரயப் பத்திரம் கொடுப்பது வழக்கம். ஆனால், மற்ற இடத்தில் வீடு கட்டித் தரும்போது பணம் முழுவதும் செலுத்திவிட்டால், கிரயப்பத்திரம் உடனடியாக வழங்கப்படும்.

உரிமையாளர்கள் முறையீடு

நில வங்கி இடத்தில் கட்டிய தால், சோழிங்கநல்லூரில் கட்டப்பட்ட 904 வீடுகளுக்கும் 10 ஆண்டுகள் கழித்துத்தான் கிரயப்பத்திரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே மருத்துவச் செலவு, திருமணச் செலவு போன்ற பல்வேறு செலவுகள் இருப்பதாலும், கிரயப்பத்திரம் இல்லாததால் வங்கியில் கடன் வாங்க முடியவில்லை என்பதாலும் தங்களுக்கு கிரயப் பத்திரம் உடனடியாக வழங்க வேண்டும் என்று ஏராளமானோர் வீட்டு வசதி வாரியத்திடம் முறையிட்டனர்.

இதுகுறித்து அரசின் கவ னத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து 10 ஆண்டுகள் என்ற நிபந்தனை 5 ஆண்டுகளாக தளர்த்தப்பட்டது. அதன்படி, சோழிங்கநல்லூரில் 3-வது கட்டத்தில் கட்டப்பட்ட 904 வீடுகளுக்கும் வரும் பிப்ரவரி மாதத்துக்குள் கிரயப்பத்திரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x