Published : 01 May 2017 11:00 AM
Last Updated : 01 May 2017 11:00 AM

தினகரன் கைது பின்னணியில் பாஜக இல்லை: மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பாஜக இல்லை என மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருந்த அவர், நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

லஞ்சப் புகார் காரணமாகவே டிடிவி தினகரன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதில் பாஜகவின் தலையீடு எதுவும் இல்லை. தினகரன் கைதின் பின்னணியில் பாஜக இருப்பதாகக் கூறுவது தவறான குற்றச்சாட்டு. இதில் துளியும் உண்மை இல்லை.

தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் குறை சொல்வதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ள னர். ஆனால், மக்கள் உண்மையை அறிவர். அதிமுகவை பிளவுபடுத்தி பாஜக காலூன்றப் பார்க்கிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது தவ றானது. தேவையில்லாமல் பாஜக மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார். மோடியின் நலத் திட்டங்களை மக்கள் விரும்புகின்றனர். மோடிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை குறித்து எது வும் கூற விரும்பவில்லை. சட்டம் - ஒழுங்கு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தொடர்பாக மாநில காவல் துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x