

தடுப்பூசியால் ஏற்பட்ட ரத்தக்கட்டு காரணமாக ஈரோடு சிறுவனுக்கு புற்றுநோய் வரவில்லை என தமிழக அரசு சமர்ப்பித்துள்ள அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மற்றும் மும்பை டாடா மருத்துவமனைகள் ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொமார பாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(28). கூலித் தொழிலாளியான இவருக்கு சுசீலா(24) என்ற மனைவியும், அன்பரசு என்ற 6 வயது மகனும் உள்ளனர். அன்பரசு பிறந்து 6 மாத குழந்தையாக இருந்தபோது அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் அம்மை தடுப்பூசியை அவனது வலது தொடையில் போட்டுள்ளனர். ஊசி போட்ட இடத்தில் அன்பரசுக்கு ரத்தக்கட்டு ஏற்பட்டு பின்னர் அது நாளடைவில் வளர்ந்து 3 கிலோ கொண்ட புற்றுநோய் கட்டியாக உருவெடுத்துள்ளது.
இது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம், தடுப்பூசியால் சிறுவனுக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர், ஈரோடு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் நல வாரிய ஆணையர் ஆகியோர் மார்ச் 27 அன்று (நேற்று) பதிலளிக்கவும், சிறுவனுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘புற்றுநோயால் அவதிப்படும் சிறுவன் அன்பரசுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அடையாறு புற்றுநோய் மையத்தில் அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டதால் அன்பரசுக்கு இந்த புற்றுநோய் கட்டி ஏற்படவில்லை. அம்மை தடுப்பூசி போட்டதற்கும், புற்றுநோய் ஏற்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என அதில் தெரிவித்து இருந்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தமிழக அரசின் இந்த அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மற்றும் மும்பை டாடா மருத்துவமனைகள் ஆய்வு செய்து ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்ரல் 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மற்றும் மும்பை டாடா மருத்துவமனைகள் ஆய்வு செய்து ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்ரல் 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.