

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அதிமுக எம்.பி.க்கள் கடந்த புதன்கிழமை புதுடெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அக்கட்சியின் சட்டப்பேரவை கொறடா மனோகரன் தலைமையில் இப்போராட்டம் சென்னையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது.
நாளை கவுன்சிலர்கள்..
அதேபோல சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள், மேயர் சைதை துரைசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.