விவசாய சங்கங்கள் நடத்தும் முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு

விவசாய சங்கங்கள் நடத்தும் முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு
Updated on
2 min read

தமிழக அனைத்து விவசாய சங்கங்கள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடத்தும் முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத் துறை தலைவர் கோபண்ணா திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, பவானி ஆறு போன்ற நதிநீர் பிரச்சினைகளில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் முறையான அணுகுமுறை கடைப்பிடிக்காத காரணத்தால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த 2007 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 192டிஎம்சி நீரை வழங்கவேண்டும் என்று தெளிவாக கூறியது. இந்த தீர்ப்பு 2013ஆம் ஆண்டில் மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டப்பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டது. நடுவர் மன்ற தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானதாக கருதப்பட்டாலும் இதை நிறைவேற்ற கர்நாடக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மொத்த நீர் பங்கீட்டு அளவில் தமிழகத்திற்கு 58 சதவிகிதம், கர்நாடகத்திற்கு 37 சதவிகிதம், கேரளா 4 சதவிகிதம், புதுச்சேரி 1 சதவிகிதம் என்றளவில் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.

ஆனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கர்நாடக அணைகளில் நீர் மிகுதியாக இருக்கும்பொழுது தண்ணீரை திறந்து தமிழகத்தை வடிநிலமாக கர்நாடகா கருதி வருகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிற காலங்களில், பாசனத்திற்கு உரிய நீரை திறந்துவிடாமல் எங்களுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லை என்று பாசாங்கு நாடகம் நடத்துவது கர்நாடக ஆட்சியாளர்களுக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது. இதில் கர்நாடக அரசு அப்பட்டமான சுயநலத்தோடு செயல்பட்டு வருகிறது. இதை எவரும் அனுமதிக்க முடியாது.

காவிரி நீரைப் பொறுத்தவரை பற்றாக்குறை காலங்களில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. நடுவர்மன்றத் தீர்ப்பின்படி ஆகஸ்ட் மாதம் வரை நமக்கு திறந்துவிட வேண்டிய ஏறத்தாழ 70 டி.எம்.சி. நீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய தவறுவது சட்ட விரோத செயலாகவே கருத வேண்டும்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை காலில்போட்டு மிதித்து உதாசினப்படுத்துகிற கர்நாடக அரசு வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல தமிழக அரசின் அனுமதியில்லாமல் காவிரியாற்றில் மேகதாதுவில் அணை கட்ட தீவிர முயற்சி செய்து வருகின்றன. இதை தடுப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். கர்நாடக அரசின் முயற்சி வெற்றி பெற்றால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறுகிற சூழ்நிலை ஏற்படும் என தமிழக அரசை எச்சரிக்க விரும்புகிறோம்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு கடந்த சில ஆண்டுகளாக அமைக்கபடாமல் உள்ளது. நாடாளுமன்றத்தில் தமிழகத்தில் இருந்து 50 உறுப்பினர்களை பெற்றிருக்கிற அதிமுக, நரேந்திர மோடி அரசை வலியுறுத்துவதற்கு தயக்கம் காட்டுவது ஏன்?

காவிரி நீர், முல்லை பெரியாறு, போன்ற பிரச்சனைகளில் நீதிமன்ற தீர்ப்புகளில் மூலமாக நமது உரிமைகள் ஓரளவு பாதுகாக்கப்பட்டு இருந்தாலும் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே சிறுவாணி அட்டப்பாடியில் அணை கட்டுகிற முயற்சில் ஈடுபட்டிருப்பது கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்ட மக்களையும் விவசாயிகளையும் கடுமையாக பாதிக்கிற செயலாகும்.

கேரள அரசு சிறுவாணியில் அணைகட்டுவது குறித்து மத்திய நீர்வளத்துறை தமிழக அரசிற்கு கடந்த மே 4ஆம் நாளில் கருத்து கேட்டு கடிதம் எழுதியது. இதையொட்டி மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு கூட்டம் நடைபெற்ற ஆகஸ்டு 11, 12 வரை தமிழக அரசு பதில் கடிதமே எழுதாமல் பாராமுகமாகவே இருந்துள்ளது. இக்குழு கேரள அரசின் கோரிக்கைக்கு பரிந்துரை வழங்கிய பிறகே தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இத்தகைய இரு மாநிலம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளில் மத்திய அரசு அவசர அவசரமாக பரிந்துரை வழங்கியது பாரபட்சமான செயலாகும்.

தமிழக மக்களை பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளில் அனைத்து கட்சியினரையும் அழைத்துப்பேசி கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்கு தமிழக முதல்வர் இதுவரை எந்த முயற்சியிலும் ஈடுபட்டதில்லை. இதுசம்மந்தமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிப்பதோடு, அனைத்து கட்சிக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை வலியுறுத்த தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலமே நமது உரிமைகள் பாதுகாக்கப்படும்.

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, பவானி ஆறு ஆகிய பிரச்சினைகளில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டு வருவதை கண்டிக்கும் வகையில் பி.ஆர். பாண்டியனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்கள் வருகிற ஆகஸ்டு 30ஆம் நாளில் தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்புக்கும் மற்றும் பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

இக்கோரிக்கைகளை தமிழக காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு, நடத்தப்படுகிற போராட்டம் வெற்றி பெற அனைத்து காங்கிரஸ் நண்பர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்'' என கோபண்ணா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in