

தமிழக அரசு அனைத்து விவசாயிகளின் ஒட்டுமொத்த விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நிலவிய வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, உரத் தட்டுப்பாடு, இயற்கைச் சீற்றம், கனமழை, வெள்ளப் பெருக்கு போன்ற பல்வேறு காரணங்களால் வேளாண் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட விளைநிலங்களில் இருந்து மகசூல் பெறமுடியாமல் மிகப் பெரிய நஷ்டத்தை அடைந்து, கவலையிலும், சோகத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகள் விவசாயத் தொழிலை செய்வதற்கு அரசு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் தொகை வாங்கியிருந்தார்கள். ஆனால் விவசாயத் தொழில் நலிவடைந்துவிட்டதால் அவர்கள் வாங்கிய விவசாயக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
இச்சூழலில் அரசு வங்கிகளும் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களும் விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த அவர்களை கட்டாயப்படுத்துவதோடு, ஜப்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு விவசாயிகளை மன உளைச்சலுக்கும் உட்படுத்துகிறார்கள். இச்செயல் விவசாயிகளை பெரிதும் பாதிக்கின்ற, ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
மேலும், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமான வேளாண் தொழிலின் பாதிப்பை அரசு கவனத்தில் கொண்டு தாங்கள் வாங்கிய விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்திட வேண்டும், விவசாயக் கடனை வசூலிக்க ஜப்தி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து கோரி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு சிறு, குறு விவசாயிகள் மட்டும் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
தமிழக அரசு - அனைத்து விவசாயிகளும் அரசு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்திட வேண்டும், அதே போல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 75 லட்சம் விவசாயிகள் வாங்கிய சுமார் 85 ஆயிரம் கோடி கடன் முழுவதையும் மத்திய அரசு தள்ளுபடி செய்திட அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அத்தொகையையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். மேலும் , விவசாயக் கடனுக்காக ஜப்தி நடவடிக்கைகளில் அரசு நேரடியாகவோ அல்லது வசூல் ஏஜென்சிகள் மூலமாகவோ ஈடுபடக் கூடாது என்பது தான் ஒட்டு மொத்த விவசாயக் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
எனவே, தமிழக அரசு அனைத்து விவசாயிகளின் ஒட்டு மொத்த விவசாயக் கடன் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்திடவும், விவசாயிகளிடம் ஜப்தி நடவடிக்கைகளில் எச்சூழலிலும் ஈடுபடக் கூடாது என்பதையும் உறுதி செய்து கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.