தமிழக ஆட்சியை கலைக்க ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும்: தமிழருவி மணியன் வலியுறுத்தல்

தமிழக ஆட்சியை கலைக்க ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும்: தமிழருவி மணியன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சட்டப்பேரவையில் மீண்டும் ஒரு ஜனநாயக படுகொலை நிகழ்ந்திருப்பதால் தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

எதிர்க்கட்சியினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அமைதியாக எழுப்பிய கோரிக்கையை பேரவைத் தலைவரான பி.தனபால் ஏற்றிருந்தால் எந்த அசம்பாவிதமும் அரங்கேறியிருக்க வாய்ப்பே கிடையாது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட அதிமுக உறுப்பினர்கள், அங்கிருந்து சட்டப்பேரவைக்கு நேரடியாக அழைத்து வரப்பட்டதால்தான் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

பெரும்பான்மை பலம் தங்களுக்கு இருப்பதாக கருதும் ஆளும்கட்சியினர், ரகசிய வாக்கெடுப்பை நடத்த தாமாக முன்வந்திருக்க வேண்டும். பலாத்காரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை வெளியேற்றிய நிலையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்துள்ளதை தமிழக மக்கள் அங்கீகரிக்கத் தயாராக இல்லை. எந்த நிலையிலும் இந்த ஆட்சி நீடிக்கலாகாது என்பதே மக்களின் அழுத்தமான கருத்து.

எனவே, மக்கள் விருப்பத்தை மனதில் நிறுத்தி, சட்டம் ஒழுங்கை காக்கவும் ஜனநாயகப் படுகொலையைத் தடுக்கவும் தமிழக ஆளுநர் இந்த ஆட்சியைக் கலைக்க அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்த குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in