

தருமபுரியில் வாகன சோதனை, போக்குவரத்து விதிகள் அமலாக்கம் ஆகியவை சூடு பிடித்துள்ள நிலையில் காவல்துறையை சேர்ந்த சிலரே போக்குவரத்து விதிகளை மீறுவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தருமபுரியைச் சேர்ந்த ‘தி இந்து’ வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை வழங்கி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தருமபுரி மாவட்டம் முழுமைக்கும் கடந்த சில நாட்களாக வாகன சோதனை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் குறித்த சோதனை, போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்றும்படி வலியுறுத்துதல் ஆகிய பணிகளை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். விபத்தால் உயிர்ச்சேதம், வாகனத் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களைத் தடுக்கவும், சாலைப் பயணம் இனிதாக அமையவும் இந்த நடவடிக்கைகள் பெரும் உதவியாக இருக்கும்.
மாவட்ட காவல்துறை இதை தீவிரமாக அமல்படுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில் நகரின் சில முக்கிய பகுதிகளில் சாலை விதிகள் காற்றில் பறக்கிறது. குறிப்பாக காவல்துறையைச் சேர்ந்த சிலரே போக்குவரத்து விதிகளை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இன்று (ஞாயிறு) முற்பகலில் தருமபுரி நான்கு ரோடு சிக்னலில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ‘ஸ்டாப்’ லைனை கடந்து பாதசாரிகள் கடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள ஸீப்ரா கிராஸ் பகுதியை ஆக்கிரமித்தபடி நின்றார். அவர் மட்டுமல்ல நான்கு ரோடு சிக்னலில் தினமும் இதே நிலை தான். பாதசாரிகளுக்கான பகுதி ஆக்கிரமிக்கப்படும் போது வாகனங்கள் செல்லும் பகுதிக்குள் நுழைந்து மக்கள் சாலையை கடக்க வேண்டியுள்ளது.
சில நாட்கள் முன்பு இப்படி கடந்தபோது மாணவி ஒருவர் நூலிழையில் பேருந்து ஒன்றிடம் இருந்து தப்பியுள்ளார். மேலும், சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போதும் நிற்காமல் கடந்து செல்லும் போலீஸாரை தருமபுரி நகரில் அடிக்கடி பார்க்க முடிகிறது. நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கையை தொடர்ந்தால் மட்டுமே விபத்துக்கள் இல்லாத பயணச் சூழல் உருவாகும். முன்னுதாரணமாக இருக்க வேண்டிய காவல்துறையினர் விதி மீறும்போது தண்டனையை சற்றே கடுமையாக வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது’ என்றார்.