Published : 16 Jan 2017 10:18 AM
Last Updated : 16 Jan 2017 10:18 AM

2,598 ஆராய்ச்சி இதழ்கள் வெளியிட்டு விஐடி நாட்டிலேயே முதலிடம்: ஜி.விஸ்வநாதன் பாராட்டு பெருமிதம்

2016-ம் ஆண்டு 2,598 ஆராய்ச்சி திட்ட இதழ்கள் வெளியிட்டு விஐடி பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்காக விஐடி பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சர்வதேச தரத்தில் உயர்கல்வி வழங்கிவரும் விஐடி பல்கலைக்கழகம், கற்பித்தல், ஆராய்ச்சி பணிகள், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளதற்காக தரவரிசை பட்டியலில் நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் முதலிடம் பெற்றுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இதை அறிவித்துள்ளது. விஐடி பல்கலைக்கழகம் கற்றல்-கற்பித்தல் முறையில் இளம் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் வண்ணம் ஆராய்ச்சிப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் சர்வதேச தரத்திலான ஆய்வகங்கள் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதன்மூலம் கடந்த 2010-ல் 441 ஆராய்ச்சி அறிக்கை இதழ்களை வெளியிட்ட விஐடி, ஆராய்ச்சி பணிகளில் காட்டிய தீவிர முயற்சியின் காரணமாக படிப்படியாக உயர்ந்து 2013-ல் 1,704, 2014-ல் 2,015, 2015-ல் 2,402 கடந்த 2016-ல் 2,598 ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களையும் தாண்டி விஐடி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஆராய்ச்சி அறிக்கை இதழ்கள் வெளியிட்டதில் நாட்டில் விஐடி பல்கலைக்கழகம் முன்னணி பெற்றுள்ளதற்காக பேராசிரியர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ள அந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன், “இத்தகைய சிறப்புக்கு விஐடி பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்புமே காரணம். பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்துள்ள “மேக் இன் இந்தியா” திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் புதிய உற்பத்திகளுக்கான ஆராய்ச்சிப் பணிகளுக்கு விஐடி பல்கலைக்கழகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

மேற்கண்ட தகவலை விஐடி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x