

தாமிரபரணி ஆற்றில் பெப்சி, கோக கோலா குளிர்பானங்கள் தயாரிப்பதற்காக தண்ணீர் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பொதுநலன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் தொழிற் பேட்டையில் பெப்சி, கோக கோலா குளிர்பானங்கள் தயாரிக்கும் ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளுக்கு குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக வழக்கறிஞர் டி.ஏ.பிரபாகர், ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏ அப்பாவு ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:
தாமிரபரணியில் இருந்து நெல்லை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 12.5 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் எடுக்கப் படுகிறது. இது தவிர தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங் களின் குடிநீர் தேவைக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப் படுகிறது. தாமிரபரணியில் இருந்து குளிர்பானம் தயாரிக்க தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதற்கு ஆயிரம் லிட்டருக்கு ரூ.37.50 மட்டும் வசூலிக்கப்படுகிறது.
குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணியில் தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லை. எனவே குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் விநியோகிக்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த மனு கடந்த நவம்பர் மாதம் அப்போதைய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தாமிரபரணியில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடையை விலக்கக் கோரி குளிர்பான நிறுவனங்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், “சிப்காட் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணியில் இருந்து 5.75 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.3 மில்லியன் லிட்டர் மட்டுமே குளிர்பான நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. குளிர்பான நிறுவனங்கள் 0.2 சதவீதம் நீரை மட்டுமே பயன்படுத்துகின்றன. இது மொத்த தண்ணீரில் 5-ல் ஒரு பங்கு ஆகும். மீதமுள்ள 99.8 சதவீத தண்ணீரை பிற நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இருப்பினும் குளிர்பான நிறுவனங்களுக்கு எதிராக மட்டும் வழக்கு தொடர்ந் துள்ளனர்” என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பு:
இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் பாசன வசதியை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் தருகிறது. தாமிரபரணியை ஒட்டி 8 அணைகளும், 283 கி.மீ. தொலைவுக்கு 11 கால்வாய்களும் செல்கின்றன. இந்த பாசன அமைப்புகள் அனைத்தும் மன்னர்கள் ஆட்சி காலத்திலும், ஆங்கிலேயேர் ஆட்சி காலத்திலும் ஏற்படுத்தப்பட்டவை.
தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து, உபரி நீர் முழுவதும் நீர்நிலை களுக்கு நேரடியாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுவும் வருத்தம் அளிக்கிறது.
இந்த வழக்கு தொடர்ந்த பிரபாகர், குளிர்பானம் நிறுவனத்தில் 3 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணிபுரிந்துள்ளார். அவர் நியாய மாக நடந்துகொள்ளாததால் பணி யில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் குளிர்பான நிறுவனத் துக்கு எதிராக செயல்படுகிறார்.
குளிர்பான நிறுவனத்துக்கும், தனக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினையை தீர்க்க பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார் என குளிர்பானம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நலன்களுக்காக பொதுநலன் வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது. எனவே 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள் ளனர்.
இதையடுத்து தாமிரபரணி யில் இருந்து குளிர்பான நிறு வனங்கள் தண்ணீர் எடுப்பதற்கான தடை நீங்கியுள்ளது.