

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெரு மாள் கோயிலில் உள்ள யோக நரசிம்மர், குளக்கரை ஆஞ்சனேயர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோயிலில் உள்ள யோக நரசிம்மர், கஜேந்திர சுவாமி, திருமழிசை யாழ்வார், குளக்கரை பக்த ஆஞ்சனேயர் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல்வர் உத்தர வுப்படி, அதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, ரூ.95 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
கடந்த 18-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. முதல்கால ஹோமம், திவ்யபிரபந்த சேவை, வேத பாராயணம் உள்ளிட்ட நிகழ்வுகள் அன்றைய தினம் நடந்தன. 19-ம் தேதி விஸ்வரூபம், கும்ப ஆராதனம், காலசந்தி, பூர்ணாஹுதி, சாற்றுமுறை, விமான கலசம் ஸ்தாபனம், ஹோமம் ஆகியவை நடந்தன. 20-ம் தேதி ஹோமம், மூலவருக்கு சொர்ணபந்தனம் (தங்கம்), ரஜதபந்தனம் (வெள்ளி) சாத்தப்பட்டன. 21-ம் தேதி ஹோமம், மஹாசாந்தி, அதிவாச திருமஞ்சனம், மஹாசாந்தி திரு மஞ்சனம் நடந்தன. மேற்கண்ட 3 நாட்களில் இரு வேளையும் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், 4 சன்னதிகளுக்கான கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூபம், கும்ப ஆராதனம், காலசந்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. காலை 9 மணிக்கு பெருமாள், கும்பத்துடன் சன்னதியில் எழுந்தருளினார். காலை 9.30 மணிமுதல் 10.25 மணிக்குள் 4 சன்னதிகளின் கோபுரங்களுக்கும் கும்பா பிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக் கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, காலை 11.30 முதல் 12.30 வரை மஹா ஆசிர்வாதம், வேத திவ்யபிரபந்த சாற்றுமுறை நடந்து, தீர்த்தம், பிரசாதம் விநியோகம் செய்யப் பட்டன. பக்தர்கள் மதியம் 1 முதல் 2 மணி வரை சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப் பட்டனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழி பட்டனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு லட்டு, கல்கண்டு, துளசி, தீர்த்தம் ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை 4.30 மணிக்கு கஜேந்திரவரதர் புறப் பாடும், இரவு 8 மணிக்கு ஸ்ரீஅழகியசிங்கர் பெரிய சேஷ வாகன புறப்பாடும் நடந்தது.
சென்னை மட்டுமல்லாது புறநகர் பகுதி மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து கும்பாபிஷேகத்தைத் தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மாடவீதிகள் முழு வதும் சுமார் 20 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. கோயிலுக்கு வெளியே 2 இடங்களில் பிரம்மாண்ட எல்இடி திரைகள் வைக்கப் பட்டு, கும்பாபிஷேக நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன. விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், துறை செயலாளர் பி.கே.ராமச்சந்திரன், ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா, இணை ஆணையர்கள் காவேரி, பரஞ்ஜோதி, தனபால், நிர்வாக அதிகாரி ஜோதிலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.