Published : 26 Sep 2016 08:35 AM
Last Updated : 26 Sep 2016 08:35 AM

8 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட்: இருவேறு சுற்றுப் பாதையில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்த திட்டம்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 8 செயற் கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி35 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 48.30 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் காலை 8.42 மணிக்கு தொடங்கியது.

ஆந்திர மாநிலம் ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி35 ராக்கெட் இன்று (26-ம் தேதி) காலை 9.12 மணிக்கு ஏவப்படுகிறது.

பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட்டில் பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக 371 கிலோ எடையுள்ள ‘ஸ்காட்சாட்-1’ என்ற செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற இயலும். இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 720 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.

இதுதவிர அல்ஜீரியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தயா ரித்துள்ள 5 செயற்கைக் கோள்கள், மும்பை ஐஐடி உருவாக்கியுள்ள ‘பிரதம்’, பெங்களூரு பிஇஎஸ் பல் கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘பிசாட்’ ஆகிய செயற்கைக் கோள்களும் அனுப்பப்படுகின்றன. 8 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 675 கிலோ. இதில் ஸ்காட்சாட் செயற்கைக்கோள் துருவ சூரிய ஒத்தியங்கு சுற்றுப் பாதையிலும், மற்ற செயற்கைக்கோள்கள் துருவ வட்டப் பாதையிலும் நிலைநிறுத்தப் படுகின்றன.

இந்திய ராக்கெட் மூலமாக ஒரே பயணத்தின்போது, இருவித மான சுற்றுப்பாதைகளில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்துவது இதுவே முதல்முறை.

பொதுவாக பிஎஸ்எல்வி ராக்கெட் டின் பயண நேரம் 20 நிமிடம் மட்டுமே. ஆனால், தற்போது இரு சுற்றுவட்டப் பாதைகளில் பயணிக்க வேண்டி யிருப்பதால் ராக்கெட்டின் மொத்த பயண நேரம் 2.15 மணி நேரமாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x