

கிருஷ்ணகிரி அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடு, கடை அடித்து நொறுக்கப்பட்டன. தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீஸார், மோதல் தொடர்பாக 17 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 29-ம் தேதி தொடங்கியது. ஏற்கெனவே இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை இருப்பதால், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வாண வேடிக்கை, கோலாட்ட நிகழ்ச்சிகள் நடந்தபோது முனியப்பன் என்பவரது தரப்பினருக்கும், திருப்பதி என்பவரது தரப்பினருக் கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, அப்பகுதி யில் உள்ள வீடு மற்றும் கடையை ஒரு கும்பல் தாக்கியது.
திருப்பதி வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள், வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். உடனடியாக ஏடிஎஸ்பி வீரராகவன், டிஎஸ்பி கண்ணன் ஆகியோர் தலைமை யில் 100-க்கும் மேற்பட்ட போலீ ஸார் குவிக்கப்பட்டு, மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். தடையை மீறி கரகம் மற்றும் சாமி சிலைகளை எடுத்துச் செல்ல முயன்றவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
அவதானப்பட்டி கிராமத்தின் ஒவ்வொரு குடும்பமும், தனித்தனியாக சென்று வழிபடவும், ஆடு, கோழிகளை பலியிடவும் அனுமதித்தனர். முன்னதாக, நெக்குந்தி கிராமத்தில் இருந்து மக்கள் கரகம் எடுத்து வந்தனர். தடையை மீறிச் செல்ல முயன்றவர்கள் மீது மீண்டும் தடியடி நடத்தினர்.
இந்த மோதல் சம்பவம் குறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸார் 23 பேர் மீது வழக்கு பதிவு செய்து, கோயில் பூசாரிகளான பெரிய கோவிந்தராஜ்(46), சின்ன கோவிந்தராஜ்(44), பவுன்(50) உட்பட 17 பேரை கைது செய்தனர். பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.