

சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சனிக்கிழமை புறப்பட்ட விரைவு ரயிலில் பெண்கள் பெட்டியில், டிக்கெட் பரிசோதகர் போல் நடித்து பணம் வசூலித்த நபரை பெண்களே மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இது குறித்து, பயணிகளில் ஒருவரான வேலூரை சேர்ந்த மீனா லலிதா சிங் (52), கூறியதாவது:
சென்டிரலில் இருந்து திருவனந்த புரத்துக்கு சனிக்கிழமை மாலை 3.25 மணிக்கு விரைவு ரயில் புறப்பட்டது. ரயில் சில மீட்டர் தூரம் சென்றதும் 2 பேர் ஓடிவந்து பெண்கள் பெட்டியில் ஏறினர். இருவரும் தங்களை டிக்கெட் பரிசோதகர்கள் என்று கூறிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், சில நிமிடங்களுக்குப் பிறகு மாணவிகளை இடிப்பதும், உரசுவதுமாக இருந்தார். மற்றொருவர் கல்லூரி மாணவிகளைக் குறி வைத்தே சோதனை செய்தார். சில மாணவிகளிடம் டிக்கெட் இல்லை. அப்போது, அந்த மாணவிகளை அவர் அநாகரிகமான முறையில் திட்டினார்.
டிக்கெட் இல்லாத மாணவியரிடம் கிடைத்த வரை லாபம் என்பது போல் ரூ.200, ரூ,300 என்று ரசீது கொடுக்காமல் வாங்கி வைத்துக் கொண்டார். மறுபுறத்தில் இருந்த நபரோ, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக அபராதம் வசூலித்தார். அதற்கு அவர் போலி ரசீதுகளையும் கொடுத்தார்.
டிக்கெட் பரிசோதகர்கள் போல் செயல்படாமல் வழக்கத்துக்கு மாறாக அவர்கள் பணத்தை வசூலித்த விதத்தைப் பார்த்ததும் சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, எங்களில் சிலர் மட்டும் துணிவை வரவழைத்துக் கொண்டு, ‘உங்கள் ஐடி கார்டை காட்டுங்கள்’ என்றதற்கு, அது பக்கத்துக்கு பெட்டியில் உள்ள தலைமை பரிசோதகரிடம் உள்ளது என்று அவர்கள் கூறினர். ‘ஐ.டி. எண்ணையாவது சொல்லுங்கள்’ என்றதற்கு, முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர்.
இதைத் தொடர்ந்து, ஆவடி அருகே ரயில் சென்றபோது அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து உட்கார வைத்தோம். அவர்கள் தப்பிவிடாதபடி அரண்போல் அமர்ந்தோம். அரக்கோணத்தில் ரயில் நின்றதும் போலீஸாரிடம் ஒப்படைக்க அவர்களை எழுப்பியபோது, ரயில் நின்ற அடுத்த விநாடியே அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
மற்றொருவரை அரக்கோணம் ரயில் நிலைய போலீஸில் ஒப்படைத்தோம். அவர்கள், “நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் ரயிலில் செல்லுங்கள்” என்றனர். நாங்கள் புகார் கொடுத்துவிட்டுத்தான் போவோம் என்றோம். அப்போதே 15 நிமிடங்கள் கடந்துவிட்டன. அதற்குள், ரயிலின் கார்டு, உடனடியாக புறப்படவேண்டும் என்றதால், நாங்கள் இறங்கவேண்டிய காட்பாடி நிலையத்தில் புகார் செய்ய முடிவெடுத்தோம். எங்களோடு, இரு பெண் போலீஸாரை அவர்கள் அனுப்பினர். காட்பாடியில் இறங்கி ரயில்வே போலீஸாரிடம் புகார் கொடுத்தோம். அதை அரக்கோணம் ரயில்வே போலீஸாருக்கு அனுப்பி, அருகில் உள்ள அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் அனுப்பும்படி கூறினோம். புகாருக்கான ரசீதினை பெற்றுக் கொண்டோம்.
ரயிலில் பெண்கள் பெட்டியில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பெண்கள் பெட்டிகளில் பாதுகாப்புக்கு பெண் போலீஸை நிறுத்தலாம். டிக்கெட் பரிசோதகர்களும் பெண்களாகவே இருந்தால் நல்லது.
பெண்கள் பெட்டியில் ஒரு பிரத்தியேக அபாயச் சங்கிலி வைக்கலாம். நாங்கள் பிடித்துக் கொடுத்த மர்ம நபர்கள், ஆயுதம் ஏதேனும் வைத்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். எனவே, ரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு கூடுதல் நடவடிக்கை தேவை என்றார்.
இது குறித்து அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி கூறியதாவது:
பெண் பயணிகளிடமிருந்து தப்பிச் சென்றவர் டிக்கெட் பரிசோதகர் என்பதும், பிடிபட்ட நபர் திருத்தணியை சேர்ந்த அவரது நண்பர் சீனிவாஸ் (35) என்பதும் தெரியவந்துள்ளது. ரயில்வே பரிசோதகரைப் பற்றிய புகாரை தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு திங்கள்கிழமை அனுப்பவுள்ளோம். காட்பாடி நிலையத்தில் பெண்கள் கொடுத்த புகார் எங்களுக்கு வந்து சேரவில்லை. ஆனால், கைது செய்த நபரை விடுவிக்க வக்கீல்கள் வந்ததால், பெண்களிடம் தவறாக நடந்தது, இடையூறாக நடந்து கொண்டது ஆகிய பிரிவுகளில் நாங்களே வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார்.