

125 ஆண்டு பாரம்பரியம் மிக்க சென்னை சட்டக் கல்லூரியை சண்முகம் ஆணையம் பரிந்துரைப்படி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்துக்கு மாற்ற ரூ.145 கோடி தேவை என திருந்திய மறு மதிப்பீட்டை பொதுப்பணித் துறையினர் சமர்ப்பித்துள்ளனர்.
சென்னை பாரீஸ் உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி 1891-ல் தொடங்கப்பட்ட இந்தியாவின் தொன்மையான கல்லூரி. ஆரம்பத்தில் மெட்ராஸ் சட்டக் கல்லூரியாக இருந்த இக்கல்லூரி 1990-ல் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியாக மாறியது. இந்து - இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஹென்றி இர்வின் என்பவரால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்தக் கல்லூரி கட்டிடம், தற்போது 125-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய முன்னாள் தலைமை நீதிபதிகள் பதஞ்சலி சாஸ்திரி, ப.சதாசிவம், காங்கிரஸ் முன் னாள் தலைவர் சி.சங்கரன் நாயர் மற்றும் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பலர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்.
கடந்த 2008-ம் ஆண்டு இக்கல்லூரியில் வெடித்த திடீர் வன்முறை குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சண்முகம் ஆணையம், இக்கல்லூரியை 3 ஆக பிரித்து சென்னைக்கு வெளியே புறநகரில் அமைக்க பரிந்துரைத்தது. அதன்படி காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 2 கல்லூரிகளை மட்டும் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் இக்கல்லூரியை ஒருபோதும் இடமாற்றம் செய்யக்கூடாது என சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட, மறுபுறம் வழக் கறிஞர்களும் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது.
ஆனால் அரசு உத்தரவுப்படி, இக்கல்லூரியின் இளநிலை சட்டப் பிரிவுகளை மட்டும் முறையே 65 கிமீ தொலைவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்துக்கும், 35 கிமீ தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெரும்புதூருக்கும் மாற்ற நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 2 புதிய கல்லூரிகளுக்கான அடுக்குமாடி கட்டிடம், விடுதி, கலை யரங்கம் கட்ட ரூ.115 கோடிக்கு ஏற்கனவே மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. 2016-17 நிதியாண்டில் இக்கல்லூரிகளை கட்ட மறு மதிப்பீடு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இக்கல்லூரிகளை கட்ட ரூ.145 கோடிக்கு மறு மதிப்பீடு தயாரித்து பொதுப்பணித் துறையினர் அரசிடம் நிதி கோரி சமர்ப்பித்துள்ளனர். ஆனால் இத்தொகையை ஒரே கட்டத்தில் ஒதுக்க முடியாது என அரசு கூறியுள்ளதால் பலகட்டங்களாக பிரித்து பணியைத் தொடங்க தேவையான நிதியை ஒதுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டக் கல்வி இயக்குனரக வட்டாரத் தில் விசாரித்தபோது, ‘‘காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிதாக கல்லூரிகள் ஏற்படுத்தி ஒரு இடத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்பையும், மற்றொரு இடத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்பையும் முதலாமாண்டில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சென்னை கல்லூரியில் தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் எழாது.
மேலும் 125 ஆண்டு பாரம்பரியம் மிக்க சென்னை கல்லூரியை நிரந்தரமாக மூடும் எண்ணம் யாருக்கும் இல்லை. மெட்ரோ ரயில் பணியால் கல்லூரியின் பிரதான கட்டிடத்தில் விரிசல் விழுந்து சீ்ல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பணிகள் முடிந்த பிறகுதான் கல்லூரிக் கட்டிடம் புனரமைக்கப்படும். அதன் பிறகு இக்கல்லூரியில் எம்எல்., பி.ஹெச்.டி போன்ற சட்ட ஆராய்ச்சி படிப்புகளை அதிநவீன முறையில் தொடங்க உள்ளோம்’’ என்றனர்.
ஆனால் இந்த கல்லூரி இடமாற்றம் தொடர்பாக இடையீட்டு மனுதாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் எஸ்.மில்டன், ‘‘எத்தனையோ சட்ட வல்லுநர்களை உருவாக்கிய சென்னை சட்டக் கல்லூரியை நிரந்தரமாக மூடக்கூடாது. உயர் நீதிமன்ற வளாகத்திலேயே சட்டக் கல்லூரி இருப்பது மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து இளநிலை சட்ட வகுப்புகளை போலவே உயர் நீதிமன்ற வளாகத்திலேயே தொடர்ந்து நடத்த வேண்டும்” என்றார்.