

அதிகாரப் போட்டியால், கடலூர் நகராட்சி நிர்வாகம் செயல்படாமல் இருக்கின்றது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் பொதுநல இயக்கங்கள் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக கடலூர் அனைத்துப் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் கூறியதாவது:
கடலூர் நகராட்சியில் இதுவரை 3 கூட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன. நகராட்சி நிர்வாகத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக தலைவரும், துணைத் தலைவரும் பத்திரிகைகளின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்கள் சார்பில் நகராட்சியின் சீர்கேட்டை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 3 கட்டப் போராட்டங்கள் மேற்கொள்ளவுள்ளோம். முதற்கட்டமாக தபால் நிலையம் மூலமாக அரசுக்கு இ.மெயில் அனுப்புவது, சென்னை கோட்டை முன் இம்மாதம் 30-ம் தேதி பொதுநல இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, தலைவர் மற்றும் துணைத்தலைவர் கூறிய புகார்கள் தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடுப்பது என்று முடிவெடுத்துள்ளோம் என்றார்.