Published : 04 Jan 2016 07:01 PM
Last Updated : 04 Jan 2016 07:01 PM

சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்களை இடம்பெறச் செய்வதற்கே முன்னுரிமை: தமிழிசை பேட்டி

சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமைப்பது, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவது என எதிலும் தமிழக பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. ஏதாவது உறுதிபட செய்துகாட்டுங்கள் என தமிழக பாஜகவுக்கு நெருக்கடி வலுத்துவரும் நிலையில், தலைவர் தமிழிசை சவுந்தராஜனோ வரும் தேர்தலில் பாஜக வலுவானதாக உருவெடுக்கும் என்கிறார்.

அவருடனான சந்திப்பு:

தி இந்து: தமிழக மக்களுக்கு புதுவருடப் பரிசாக ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கம் இருக்கும் என நீங்கள் கூறினீர்கள். ஆனால், விலங்குகள் நல வாரியமோ ஜல்லிக்கட்டு தடை நீக்கத்தை எதிர்க்கிறது. மத்திய அரசு மவுனமாக இருக்கிறது. உங்கள் கருத்து என்ன?

தமிழிசை: கடந்த 18 மாதங்களாக ஜல்லிக்கட்டு தடை நீக்கத்துக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். ஆனால் கடைசி நேரத்தில் விலங்குகள் நல வாரியமோ தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அட்டர்னி ஜெனரலும் எவ்விதமான சாதகக் கருத்தை தெரிவிக்கவில்லை. ஆனால், எங்களுக்கு மிகவும் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் காங்கிரஸ் கட்சி இவ்விவகாரத்தை அணுகும் விதமே. ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமே காங்கிரஸ் கட்சியினர்தான். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட ஜல்லிக்கட்டை எதிர்த்தார். ஆனால், நாங்கள் இப்போது ஜல்லிக்கட்டு தடை நீக்கத்துக்காக பாடுபடும் வேளையில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. இருப்பினும், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த பாஜக தொடர்ந்து போராடும்.

தி இந்து: எதிர்ப்பை ஊகிக்காமல் பாஜக உத்தரவாதம் கொடுத்தது எப்படி? ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஓட்டுக்காக அவ்வாறு அறிவித்தீர்களா?

தமிழிசை: இங்கு ஓட்டு அரசியலுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாக செயல்படுவதற்கோ வாய்ப்பில்லை. எங்கள் எண்ணம் தமிழ் கலாச்சாரமும், பாரம்பரியமும் பேணப்பட வேண்டும் என்பது மட்டுமே. சிலர் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதாக கூறி ஜல்லிக்கட்டுக்கு தடை கோருகின்றனர். ஆனால், விலங்குகளுக்கு எவ்வித தீங்கும் இல்லாமலேயே ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்பதே எங்கள் வாதம்.

தி இந்து: தமிழகத்தில் கூட்டணியை அமைக்க பாஜக திணறுவது ஏன்?

தமிழிசை: எந்தக் கட்சிதான் திணறவில்லை. திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸ் கட்சிக்கும், தேமுதிகவுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அந்த கூட்டணிக்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது. இது திமுகவின் விரக்தியின் வெளிப்பாடாக நீங்கள் பார்க்கவில்லையா? பேச்சுவார்த்தைகள் நடத்துவதால் நாங்கள் திணறிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை. நல்லதொரு வலுவான கூட்டணியை மக்கள் முன் மாற்று சக்தியாக நிறுத்த வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறோம். கடந்த 18 மாதங்களில் எந்த கட்சியாவது கூட்டணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறதா? அப்படி இருக்கும்போது பாஜகவிடம் மட்டும் ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்.

தி இந்து: பாமக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பின்வாங்குவதாக இல்லை. தமிழக பாஜக இதை எப்படி பார்க்கிறது?

தமிழிசை: அரசியலில் யாராக இருந்தாலும் யதார்த்தை புரிந்து நடக்க வேண்டும். எதிர்க்கட்சியை வெற்றி கொள்ளும் அளவுக்கு நமது தளத்தை வலுவானதாக அமைக்க வேண்டும். இதற்கு கூட்டணி அவசியம். பாமக தனித்து போட்டியிடுவதால் எந்த லாபமும் ஏற்படாது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு சவால் விடுக்க வேண்டும் என்றால் வலுவான கூட்டணி மிக மிக அவசியம். அரசியல் சூழலும், கூட்டணி கணக்கும் மிகவும் முக்கியம். அரசியல் சூழல் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. இப்போது கூட்டணி கணக்குகளை சரியாக வகுக்க வேண்டும். பாமக முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது. ஆனால், நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால் முதலில் வெற்றி பெற வேண்டும் பின்னர் கூட்டணி தொடர்பான மற்ற விஷயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தி இந்து: தேமுதிகவும், பாமகவும் எதிரும் புதிருமாக இருக்கின்றனவே..

தமிழிசை: மக்களவை தேர்தலின்போதும் இதே வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், கூட்டணி வலுவாக அமைந்தது. முடிவுகளை நீங்கள் பார்த்தீர்கள். எனவே, மீண்டும் வலுவான கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

தி இந்து: இந்த கூட்டணி சாத்தியமற்று போனால்.. உங்கள் அடுத்த திட்டம் என்ன?

தமிழிசை: தேசிய ஜனநாயக கூட்டணியை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். ஒரு வேளை அது முடியாமல் போனால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம். தமிழக சட்டப்பேரவையில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட உறுப்பினர்களாக பாஜகவினரை அமர வைக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். தங்கள் நலன் விரும்பும் எம்.எல்.ஏ.க்களை பொதுமக்கள் அடையாளம் கொண்டுவிட்டார்கள் என்றால் பின்னர் அவர்கள் எங்களை ஆதரிக்க ஒருபோதும் தவற மாட்டார்கள்.

தி இந்து: தமிழக வெள்ள பாதிப்புகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என விமர்சனம் உள்ளதே?

தமிழிசை: பேரிடர் மேலாண்மை அவ்வளவு எளிதல்ல. மத்திய அரசு மீட்பு குழுவை அனுப்புவதில் இருந்து அனைத்து உதவிகளையும் துரிதமாக செய்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு செய்துள்ளார். உடனடியாக நிவாரணத் தொகையையும் வழங்கியுள்ளார். ஆனால், இளங்கோவன், வைகோ போன்ற தமிழக தலைவர்கள் மத்திய அரசு என்ன செய்தால் அதில் குறை கண்டுபிடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் வெற்று அரசியல்.

தி இந்து: அதிமுகவுடன் மென்மையான போக்கை கடைபிடிப்பது கூட்டணிக்கான அச்சாரமா?

தமிழிசை: இல்லை. ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம். அவர்கள் செய்யும் சில நல்ல காரியங்களை பாராட்டுகிறோம். வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் மக்கள் நலனுக்கு மத்திய - மாநில அரசு ஒத்துழைப்பு அவசியம் எனக் கருதினோம். துயர நேரத்தில் அரசியல் செய்ய முடியாது. விமர்சிக்க வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சியை குறை கூறுவதில்லை. தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறோம். செம்பரம்பாக்கம் விவகாரத்தில் தமிழக அரசை நாங்கள் கடுமையாக சாடியுள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x