

கே.ஜே.சரசாம்மா என்றாலே நடன உலகில் அறியாதவர்கள் கிடையாது. பரத நாட்டியக் குருக்களில் தனக்கென்று ஒரு தனிப்பாணியை வைத்துக்கொண்டவர் சரசா. வழுவூரார் வழியில் நாட்டியம் பயின்றவர். சரசாம்மாவிடம் இன்றைய தமிழக முதல்வர் உட்பட பல நடனமணிகள் நாட்டியம் பயின்று உள்ளனர். சஞ்சாரிகளை மாணவியருக்குத் தகுந்தவாறு சொல்லிக் கொடுத்தவர் சரசா. உதாரணத்திற்கு, ‘ராம ராம ப்ராண சகீ’ என்ற பதத்திற்கு அவரது எல்லா மாணவியரும் ஒன்றுபோல் நடனம் ஆடுவது கிடையாது. முகபாவங்களை எப்படி காட்டவேண்டும் என்பதை மாணவியரின் கற்பனை வளத்திற்கே அவர் விட்டுவிடுவார். அவரால் உருவாக்கப்பட்டவர்தான் ஸ்ரீநிதி.
ஸ்ரீநிதி, தனது நான்காவது வயதில் இருந்து சரசாம்மாவிடம் நடனம் பயின்றவர். சமீபத்தில் மயிலாப்பூர் பைன் ஆர்ட்சில் அவரின் நடன நிகழ்ச்சி நடந்தது. தன் நேர்த்தியான நடனத்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நன்கு பூர்த்தி செய்தார் ஸ்ரீநிதி.
ஒத்திசைவான நடனம்
ஸ்ரீநிதி சுந்தர், தனது நிகழ்ச்சியை நடராஜர் பத்து என்ற இசை உருவினைக் கொண்டு துவங்கினார். அதில் கண்ட சாபு தாளதிற்கு ஏற்ப ஜதிகளை அமைத்துக்கொண்டு விறுவிறுவென்று ஆடினார். பிறகு ‘சாமியை அழைத்து வாடி’ என்ற பத வர்ணத்தை எடுத்துக்கொண்டு பாவபூர்வமாக ஆடினார். தஞ்சை நால்வரின் இந்த வர்ணம் மதுரை சொக்கநாதரை நாயகனாகக்கொண்டு இயற்றப்பட்டது. சிவபெருமானைப் பஞ்சபூதங்களின் வடிவமாகச் சித்தரித்து ஸ்ரீநிதி நமது கண்களுக்கு விருந்தளித்தார்.
பிறகு ‘சலீயே குஞ்சனமோ’ என்ற ஸ்வாதித்திருநாள் மஹாராஜாவின் பதத்தை எடுத்துக்கொண்டார். இதன் ராகம் பிருந்தாவன சாரங்கா. கிரிஜா ராமஸ்வாமி மிகவும் அழகாக இதனைப் பாட, ஹேமமாலினி அவர்களும் அதற்கு ஏற்றாற்போல் வயலின் இசைத்து நடனம் சிறப்பாக அமைய ஒத்துழைத்தார்கள். இதன் பிறகு ‘மத பயலே’ என்றொரு பதம். அதைக் கேட்டபோது தமிழ் சரியாகத்தான் இருந்ததா என்று ஒரு சிறு சந்தேகம் எழுந்ததென்னவோ உண்மை. இந்தப் பதத்தில் சிருங்காரரசத்தை அப்படியே பிழிந்து கொடுத்தார் ஸ்ரீநிதி.
பிறகு வந்த தில்லானாவிற்கு அவர் ஆடியதோ அதி அற்புதம். மிகவும் நேர்த்தியான ஆடை வடிவமைப்பு. அவரே செய்துகொண்டதாம். சிறந்த கலைஞர். நடனத்திற்கு மிருதங்கம் வாசித்த சக்திவேலும் ஜதிகளிலெல்லாம் மிருதங்கத்தைத் தனியாக இசைக்காமல் கல்யாணியின் நட்டுவாங்கத்தோடு ஒத்து இசைத்தார். கல்யாணியின் நட்டுவாங்கம் மிக அருமை. அவரும் சரஸா அம்மாவின் மாணவிதான். ஸ்ரீநிதி தனது பதினோறாவது வயதிலிருந்து மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் நிகழ்ச்சி வழங்கி வருகிறார். சென்னையில் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரியும் ஸ்ரீநிதி, தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் நடனப் பயிற்சி செய்கிறாராம்.