

பாகுபலி - 2 படத்தை வரும் 28-ம் தேதி வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 27-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் ராணா, பிரபாஸ், சத்யராஜ், நாசர், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பாகுபலி- 2 திரைப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் இந்தி தவிர்த்து பிற மொழி மற்றும் சேட்டிலைட் விநியோக உரிமையை ‘கே புரொடக்க்ஷன்’ நிறுவன உரிமையாளர் எஸ்.என்.ராஜராஜன் பெற்றுள்ளார்.
இந்நிலையில், எஸ்.என்.ராஜராஜனுக்கு எதிராக சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கார்த்திகேயன் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனக்கு எஸ்.என்.ராஜராஜன் ரூ.1.48 கோடி பணம் தரவேண்டும். இந்த பணத்திற்காக அவர் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது ஏற்கனவே அவரது வங்கி கணக்கு காலாவதியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே ராஜராஜன் பெற்றுள்ள பாகுபலி- 2 படத்தின் அனைத்து உரிமைகளையும் முடக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நடந்தது. அப்போது கார்த்திகேயன் மீண்டும் ஒரு கூடுதல் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ‘பாகுபலி- 2 படத்தின் தமிழ் விநியோக உரிமையை எஸ்.என்.ராஜராஜன், ஸ்ரீ கிரீன் புரொடக் ஷன் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளதாக முதலில் தெரியவந்தது. ஆனால், தற்போது அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாகுபலி-2 படத்தின் விளம்பரத்தில் ஸ்ரீ கிரீன் புரொடக் ஷன் நிறுவனத்தின் பெயர் இடம்பெறவில்லை. எனவே இந்த விநியோக உரிமத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்யவும், தமிழகத்தில் திரையிடவும் எஸ்.என்.ராஜராஜனுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என அதி்ல் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், இதுதொடர்பாக எஸ்.என்.ராஜராஜன் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.