

தமிழகத்தில் ‘உதய்’ திட்டத்தின் கீழ் மானிய விலையில் மின் விளக்குகள் விற்கும் திட்டம் விரைவில் தொடங்கும் எனவும், சமூகவலைத்தளங்களில் பரவும் செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் மின்வாரியத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மாநிலங்களின் மின் விநியோகத் திறனை மேம்படுத்தவும், மின் உற்பத்தி விலை மற்றும் மின்விநியோக அமைப்புகளின் வட்டிச் சுமையை குறைக்கவும் ‘உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா’ (உதய்) என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தமிழகம் உட்பட 21 மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன. இத்திட்டத்தில் தொழில்நுட்ப, வணிகரீதியான இழப்பு, மின்சாரத்தை கொண்டு செல்வதில் ஏற்படும் இழப்பு ஆகியவற்றைக் குறைக்கவும், எரிசக்தி திறனுள்ள எல்இடி பல்புகள், விவசாய பம்புகள், மின்விசிறிகள், தொழிற்சாலை சாதனங்கள் போன்றவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பது, உயர் அழுத்த மின் தேவை, எரிசக்தி பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் முதல் கட்டமாக, மின்சாரத்தை கொண்டு செல்லும் போது வழித்தடத்தில் ஏற்படும் மின் இழப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில், அதிக தூரத்துக்கு உள்ள மின்கம்பிகளை மாற்றி, இடையிடையே மின்மாற்றிகளை அமைப்பது, கூடுதலாக 33 கேவி, 110 கேவி மின் திறனுள்ள துணை மின் நிலையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக மானிய விலையில், குறைந்த மின்திறன் செலவில் இயங்கும் எல்இடி பல்புகள் விற்பனை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
மின்சார வாரிய கோவை மாநகர் வட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘உதய் மின் திட்டத்தில் ஒன்றான எல்இடி பல்புகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கேரளத்தில் இந்த திட்டங்கள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. தமிழகத்தில் தற்போது மின்பகிர்மான வழித்தடங்கள் சீரமைப்புப் பணி நடக்கிறது. அடுத்தகட்டமாக மானிய விலையில் எல்இடி பல்புகள் விற்பனை தொடங்கும். ஒவ்வொரு மின்வாரிய அலுவலக வளாகத்திலும் இதற்கான விற்பனை மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான திட்டம் தொடங்கும்’ என்றார்.
இதனிடையே, மானிய விலையில் எல்இடி பல்புகள் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த செய்திகளை நம்பி ஏராளமான மக்கள் மின்வாரிய அலுவலகங்களுக்கு சென்று, ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள்.
இதுகுறித்து கோவை மாநகர மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாரதி கூறும்போது, ‘மானிய விலை யில் எல்இடி மின்விளக்குகள் விற்கப் படுவதாக சமூகவலைத்தளங்களில் வரும் தகவல்கள் குறித்த செய்தி வந்தது. ஆனால் அதில் உண்மையில்லை. அந்த திட்டம் இதுவரை தொடங்கப்படவில்லை. மக்கள் அதை நம்பி ஏமாற வேண்டாம்’ என்றார்.