

தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிக்கப்படுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா. பாண்டியன் தெரிவித்தார்.
நாகப்பட்டினத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சாலையோர மைல் கல்களில் மீண்டும் இந்தி புகுத்தப்பட்டுள்ளது. இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தக் கூடாது.
இயற்கையின் தாக்குதல், ஜெயலலிதா மரணம், கட்சிக்குள் பிளவு என தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலை பயன்படுத்தி, தமிழகத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் பாஜக இறங்கியுள்ளது.
டெல்லியில் நடைபெறும் தமிழக விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏப்.6 முதல் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற உள்ளன என தா.பாண்டியன் தெரிவித்தார்.