Published : 16 Dec 2013 09:15 PM
Last Updated : 16 Dec 2013 09:15 PM

மின் சேமிப்பில் கோவை மாநகராட்சி சாதனை: மேயர்

கோவை மாநகராட்சியில் மின்சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் தேசிய அளவில் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்களுக்கான போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.

இந்த தகவலை கோவை மேயர் செ.ம.வேலுச்சாமி சனிக்கிழமை பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:

தெருவிளக்குகளில் மின்சேமிப்பு செயல்படுத்தப்பட்டதில் ஆண்டொன்றுக்கு மின்தேவை 2 மெகாவாட் அளவு குறைக்கப்பட்டு மின் கட்டணம் ரூ.2.62 கோடி சேமிக்கப்பட்டு வருகிறது. புதிதாக இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தெருவிளக்குகளை ரூ.21 கோடி திட்ட மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் (பிபிபி மாடல்) எல்இடி விளக்குகளாக மாற்றம் செய்தல் பணி முன்னேற்றத்தில் உள்ளது.

மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள சிஎப்எல் மற்றும் குழல் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியதில் மின்சார அளவு 30 சதவீதம் சேமிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டதில் 13.6 கிலோ வாட் மின் சேமிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், காற்றாலை மூலம் செயல்படுத்தப்படும் மின் உற்பத்தி செய்யும் திட்டம் மூலம் ஆண்டொன்றுக்கு 3.5 கிலோவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி மருத்துவமனைகளில் சுடுநீர் தேவைக்காக சூரிய சக்தி கொதிகலன்கள் (சோலார் வாட்டர் ஹீட்டர்) பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் மின் சேமிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள ஜேஎன்என்யுஆர்எம் கட்டிடத்தில் மின்சேமிப்பு கருவி பொருத்தப்பட்டு ஆண்டொன்றுக்கு சுமார் 15 சதவீதம் மின்சேமிப்பு செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி அம்மா உணவக கட்டிடங்களில் சூரிய சக்தி மின்உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு ஆண்டொன்றுக்கு 2 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பள்ளிகளில் உள்ள மதிய உணவுத் திட்டத்தில் சூரியசக்தி குக்கர் பொருத்தப்பட்டு சமையல் செய்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. துடியலூர், நஞ்சுண்டாபுரம் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் எரிவாயு மயானங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின்தேவை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால் மாநகராட்சிக்கு மின்தேவை குறைக்கப்பட்டு, கரியமில வாயு (சிஓ2) உற்பத்தி பெருமளவு குறைக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர இந்த ஆண்டில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி செலவில் 42 கி.மீ நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50.86 கோடி செலவில் 116.25 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு ரூ.1.50 கோடி செலவில் 6.28 கி.மீ நீளத்திற்கு பணிகள் துவக்கப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.07 கோடி செலவில் 3 கி.மீ நீளத்திற்கும், ரூ.32.83 கோடி செலவில் 112.27 கி.மீ நீளத்திற்கும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலைப் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x