Published : 14 Jan 2017 09:29 AM
Last Updated : 14 Jan 2017 09:29 AM

ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி

ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள், மாட்டிறைச்சி வியாபாரத்தை மட்டும் அனுமதிப்பது சரியா என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெண்ணுக்கு அழகு எப்படியோ, ஆணுக்கு வீரம் அப்படி. தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, இளைஞர்கள் தங்கள் ஆற்றலையும், வீரத்தையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக இருந்தது. உடலுறுதி, திறமை, துரிதமாய் செயல்படும் குணம், போட்டி போடக்கூடிய பலம் யாவும் ஜல்லிக்கட்டு விளையாட தேவையான அடிப்படை குணங்கள். இதனால் மது, போதைப் பொருள் போன்ற தீயப் பழக்கங்களில் கிராமப்புற இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

நம் கலாச்சாரத்தில் மாட்டை நாம் வெறும் விலங்காக பார்க்கவில்லை. நாம் விவசாயம் செய்தாலும் சரி, விளையாடினாலும் சரி, மாட்டுடன் அதன் பாலுடன் நமக்கொரு சம்பந்தம் இருக்கிறது. அதைப் போலவே அதனுடன் விளையாடும் பழக்கமும் நம் கலாச்சாரத்தில் நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.

ஜல்லிக்கட்டில் போட்டியிடும் காளைகளை யாரும் துன்புறுத்துவதோ, கொல்வதோ இல்லை. காயம் ஏற்படுவதோ, தற்செயலாக மரணம் சம்பவிப்பதோ மனிதர்களுக்குத்தானே தவிர காளைகளுக்கு அல்ல. விலங்குகள் உரிமை, விலங்குகள் துன்புறுத்தல் என்று பேசுபவர்கள், உண்மையுடன் இருந்தால், தினமும் லட்சக்கணக்கான மிருகங்களை கொன்று வருகின்ற இறைச்சி தொழிற்சாலைகளை மூடுவதற்கு பாடுபடட்டும். உலகிலேயே அதிக மாட்டுக்கறி ஏற்றுமதி செய்வது இந்தியாதான். வெட்கக்கேடான விஷயம் இது

தனி மனிதர் தன் வீட்டில் வெட்டிச் சாப்பிடுவது வேறு. அது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், நம் தேசம் மாட்டுக்கறி ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பதை நான் விரும்பவில்லை. மாட்டுக்கறி உண்பது சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல, அது சுற்றுச்சூழலை சீரழிக்கும். இன்று உலகமே இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது.

நமக்கு ஊட்டமளித்து, நமக்காக உழைத்து, நம் மண்ணை வளப்படுத்திய இந்த விலங்குகளை வெறும் பணத்துக்காக வெட்டிக் கொல்கிறோம். இவற்றை எல்லாம் எதிர்த்து சண்டையிடுவதற்கு பதில், தமிழக கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்குக் கிடைக்கும் எளிமையான சந்தோஷத்தை அழிக்கப் பார்ப்பது சரியா? ஜல்லிக்கட்டு விளையாட்டு உயிர்ப்புடன் இருக்க வேண்டும், எதிர்காலத்திலும் இது மிகுந்த சிறப்புடன் நடக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

இவ்வாறு சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x