

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்ற திமுக தலைவர் கருணாநிதியின் முடிவை வரவேற்பதாக புதுச்சேரி மாநில திமுக அறிவித்துள்ளது.
புதுச்சேரி திமுக ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்: "நேற்று, நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரசுடன் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த வகையிலும் திமுக கூட்டணி சேராது என்று கட்சியின் பொதுக்குழுவில் பேசிய கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பினை, புதுச்சேரி திமுக தொண்டர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர். தலைவர் கருணாநிதியின் முடிவு கட்சித் தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மீனவர்களை கைவிட்டுவிட்டது. மேலும், மீனவர்கள் அனுபவிக்கும் வேதனையை துடைத்து, நிம்மதியாக அவர்க மீன்பிடி தொழிலை மேற்கொள்ள மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பல்வேறு பிரச்சினைகள் அடிப்படையில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்ற திமுக தலைவர் கருணாநிதியின் முடிவு சரியாவதே". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.