மின்வெட்டுப் பிரச்சினையில் திமுக, காங்கிரஸ் சதி: முதல்வர்

மின்வெட்டுப் பிரச்சினையில் திமுக, காங்கிரஸ் சதி: முதல்வர்
Updated on
2 min read

மத்திய அரசுடன் திமுக சதி ஆலோசனை செய்து தமிழகத்தில் மின்வெட்டை ஏற்படுத்துவதாக ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

ஏற்காடு பிரச்சாரத்துக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் ஹோலிகிராஸ் பள்ளிக்கு வியாழக்கிழமை காலை வந்தார். அங்கிருந்து பிரச்சார வேனில் மின்னாம்பள்ளி சென்றார். அங்கு அவர் பேசியதாவது:

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே ஏற்காடு தொகுதி அதிமுக-வின் கோட்டையாக திகழ்கிறது. 1977 முதல் 2011 வரை நடந்த 9 தேர்தல்களில் அதிமுக கூட்டணி இங்கு 7 முறை வெற்றி பெற்றுள்ளது. மறைந்த ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் பெருமாள் அதிமுக மீது தீவிர விசுவாசம் கொண்டவர். அவர் 1989, 1991, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று 3 முறை இங்கு சட்டமன்ற உறுப்பினரானார். அவரது மறைவை அடுத்து இங்கு போட்டியிடும் அவரது மனைவி சரோஜாவுக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

அதிமுக அரசு மாதம்தோறும் விலையில்லா அரிசி, பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் திருமண உதவித் தொகை, தாலிக்குத் தங்கம், 10-ம் வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம், ஏழைகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கிவருகிறது. ஏழைக் குழந்தைகளுக்கு கட்டணமில்லா கல்வி, நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், கணினி உபகரணங்கள், மடிக்கணினிகள் வழங்கி தமிழகத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். ஏழை மக்களுக்காக தமிழகத்தில் 727 கோடி ரூபாயில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், ஆதரவற்றோருக்கான உதவித் தொகையை ரூ.500-லிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளோம். அரசு பஸ்களில் பத்து ரூபாய்க்கு மினரல் தண்ணீர் பாட்டில் வழங்கப்படுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 3898.46 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பழங்குடியின மக்கள் மேம்பாட்டுக்காக 50 கோடியில் திட்டப்பணிகள் நடந்துவருகிறது.

மின் தேவையை பூர்த்தி செய்து, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்ற இந்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழ்ந்தது. ஆனால், தற்போது மின்பற்றாக்குறையால் வேறு வழியில்லாமல் மின்வெட்டு இருக்கிறது. மாநில அரசின் மின் நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில் மத்திய அரசின் கல்பாக்கம் அணு மின் நிலையம், நெய்வேலி அனல் மின் நிலையங்களில் நிலக்கரி, நாப்தா பற்றாக்குறையால் அங்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்துக்கு 2500 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

திமுக-வும் மத்திய அரசும் சதி ஆலோசனை செய்து தமிழகத்தில் மின் உற்பத்தியை சீர்குலைத்து மக்களை வாட்டுகின்றன. இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் திமுக, மின்வெட்டு பிரச்சினையை பேசி அதனை மக்களின் மனதில் பதிய வைக்க முயற்சிக்கிறது. நான் மத்திய அரசுக்கு அடிபணியாத காரணத்தால் அது தமிழக மக்களை பழிவாங்குகிறது. ஆனாலும், மத்திய அரசின் சூழ்ச்சியில் இருந்து மீண்டு தமிழகத்தை ஒளிமயமான, மின் மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

கடந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருந்தது. ஆனால், மக்கள் இப்போது நிம்மதியாக வாழ்கிறார்கள். கடந்த ஆட்சியில் ஏராளமான நில அபகரிப்புகள் நடந்தன. அந்த நிலங்களை எல்லாம் நான் மீட்டுத் தந்துள்ளேன். தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

எனவே, இந்த இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜாவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்யுங்கள் என்றார்.

நடந்ததும், நடப்பதும்

ஜெயலலிதா பேசும்போது தனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மற்றும் இனி நிறைவேற்றப்படும் நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டார்.

அதிமுக ஆட்சியில் ஏற்காடு தொகுதியில் ரூ.58.50 கோடியில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.39.83 கோடியில் பல்வேறு திட்டங்கள் நடந்துவருகின்றன. ரூ.3.68 கோடியில் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.6.61 கோடியில் குடிநீர்த் திட்டங்கள் நடக்கவிருக்கின்றன. ரூ.52.63 கோடியில் சாலை பணிகள் நடந்துள்ளன. மேலும் ரூ.64.40 கோடியில் சாலைப் பணிகள் நடக்கவிருக்கின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.24.58 கோடி மதிப்பில் சூரிய சக்தியால் இயங்கும் 1,254 பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.39 கோடியில் 2,408 வீடுகள் என மொத்தம் 3,662 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட அயோத்தியாப்பட்டணம், சிங்கிபுரம், டி.பெருமாபாளையம், கூட்டாத்துப்பட்டி ஆகிய இடங்களில் விரைவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்படும். வாழப்பாடி அரசு கலைக் கல்லூரி, பேளூர் ஈஸ்வரன் கோயிலில் 3.5 கி.மீட்டர் தொலைவுக்கு கிரிவலப் பாதை, நெய்யமலையில் 30 படுக்கைகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம், கருமந்துறையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை விரைவில் அமைக்கப்படும். வலசையூர் மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்படும். ஏற்காட்டில் இருந்து டேனிஷ்பேட்டைக்கு 3 கி.மீட்டர் தொலைவுக்கு விரைவில் சாலை போடப்படும். கன்னிமார் ஓடையில் தடுப்பணை கட்டும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in