

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள முடிவு செய்திருப்பது, தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்த மிகப் பெரிய துரோகம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளமாட்டார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இச்சிக்கலில் தமிழர்களை ஏமாற்றுவதற்கான நாடகம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்ளாததால் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டு விடப்போவதில்லை. அதுமட்டுமின்றி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர்கள் கலந்துகொள்ளாமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த 10 காமன்வெல்த் மாநாடுகளில் ஐந்தில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை.
இதன் மூலம் ஈழத்தமிழர் பிரச்சினையில் இலங்கைக்கு எந்த நெருக்கடியையும் நம்மால் தர முடியாது. இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களைக் கண்டித்து காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் என்று பிரதமர் அறிவித்திருந்தாலாவது அது இலங்கைக்கு குறைந்தபட்ச நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும்.
ஆனால், தமக்கு பதில் வெளியுறவு மந்திரியை இலங்கைக்கு அனுப்பி வைப்பது மட்டுமின்றி, அம்மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? என்பதை விளக்கி அதிபர் ராஜபக்சேவுக்கு பிரதமர் கடிதம் எழுதியிருக்கிறார்.
தமிழர்கள் என்ன தான் வேதனையில் துடித்தாலும், இந்தியாவின் நடவடிக்கைகள் இலங்கையின் கொலைகாரர்களுக்கு வலிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் பிரதமரின் நோக்கமாக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மாறாக காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்திருப்பதன் மூலம் மத்திய அரசு மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறது. இதை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்; சரியான நேரத்தில் சரியான பாடத்தை புகட்டுவார்கள்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.