Published : 21 Aug 2016 12:01 PM
Last Updated : 21 Aug 2016 12:01 PM

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில் நிர்வாகிகள் கூட்டத்தை மாவட்டச் செயலாளர் புறக்கணிப்பு: குமரி அதிமுகவில் புதிதாக புகைச்சல்

அதிமுக தலைமைக் கழக உத்தரவுப்படி, கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நேற்று முன் தினம் மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தை மாவட்டச் செயலாளர் உட்பட கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் பலரும் கூட்டத்தை புறக்கணித்த விவகாரம், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில், குமரி மாவட்டத்தில் அதிமுகவால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கும், விளவங்கோடு தொகுதியில் டெப்பாசிட் தொகையையே பறிகொடுத்து நான்காவது இடத்துக்கும் தள்ளப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலிலாவது குறிப்பிட்ட அளவு வெற்றி பெற வேண்டும் என்ற திட்டத்தில், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக இருந்த விஜயகுமார், ராஜ்யசபா எம்.பியாகவும், மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

ஏற்கெனவே குமரி மாவட்ட அதிமுகவில் ஏராளமான கோஷ்டிகள் இருந்த நிலையில், இதுவரை இலைமறை காயாக இருந்து வந்த கோஷ்டி பூசல், நேற்று முன் தினம் நடந்த மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற ஆலோசனைக் கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது.

பச்சைமால் ஏற்பாடு

அதிமுக தலைமைக் கழக அறிவிப்பின் படி மாவட்ட வாரியாக எம்.ஜி.ஆர். மன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. ஏற்கெனவே 18 மாவட்டங்களில் இக்கூட்டம் முடிந்த நிலையில், நேற்று முன் தினம் மாலை நாகர்கோவிலில் தனியார் திருமண மண்டபத்தில் இக் கூட்டம் நடந்தது.

மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பச்சைமால் ஏற்பாட்டில், தலைமைக் கழக நிர்வாகிகள், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், மாநில அமைப்புச் செயலாளர் என்.தளவாய் சுந்தரம், சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் ஜஸ்டின் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விஜயகுமார் புறக்கணிப்பு

இக்கூட்டத்தில் நோட்டீஸில் பெயர் இருந்தும், முறையான அழைப்பு விடுத்தும் மாவட்டச் செயலாளரும், எம்.பியுமான விஜயகுமார் கலந்து கொள்ளவில்லை. 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட கூட்டம், விஜயகுமார் வருகையை எதிர்பார்த்து தாமதமாகவே மாலை 5.30-க்கு துவங்கியது. ஆனால் கடைசி வரை கூட்டத்துக்கு விஜயகுமார் வரவில்லை. மாவட்டத்தில் பொறுப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும் கூட்டத்துக்கு வரவில்லை.

கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற ஆலோசனைக் கூட்டம், மாவட்டச் செயலாளர் இல்லாமல், நாகர்கோவிலில் நேற்று முன் தினம் மாலை நடைபெற்றது.

உள்நோக்கம் இல்லை

அதிமுகவில் அமைப்பு ரீதியாக 11 அணிகள் உள்ள நிலையில், மூன்று அணி செயலாளர்களும், ஒரே ஒரு ஒன்றிய செயலாளருமே கூட்டத்தில் கலந்து கொண்டனர். இருந்தும் திரளாக வந்திருந்த தொண்டர்களால் கூட்டம் நடந்தது. குமரி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் குறித்து மாவட்டச் செயலாளர் விஜயகுமார் எம்.பியிடம் கேட்ட போது, `கூட்டுறவு சங்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள அதங்கோடுக்கு சென்றிருந்தேன். அந்த கூட்டம் முடிய நேரம் ஆகி விட்டதால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் குமரி மாவட்டத்தில் அதிமுக நூறு சதவிகிதம் வெற்றி பெறும். நகராட்சி அளவில் உள்ளாட்சித் தேர்தல் கூட்டங்களையும் முடித்து விட்டோம். வெற்றி இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x