Published : 30 Jun 2016 10:17 AM
Last Updated : 30 Jun 2016 10:17 AM

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சிக்கி அழியும் கடல் தாமரைகள்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கி கடல் தாமரைகள் அழிந்து வருவதாக கடலியல் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கடல் பகுதியான மன்னார் வளைகுடாவில் கடல் பசு, டால்பின், திமிங்கலம், கடல் குதிரைகள், கடல் ஆமைகள், பவளப் பாறைகள், கடல் அட்டைகள் உட்பட 3,600-க்கு மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.

மன்னார் வளைகுடாவில் காணப்படும் பவளப்பாறைகள் மனித மூளை வடிவம், மான்கொம்பு வடிவம், மேஜை மற்றும் தட்டு வடிவம் போன்ற வடிவங்களிலும் இருக்கின்றன. இதில் மிருதுவான பவளப்பாறை வகைகளில் கடல் தாமரை படர்ந்து வளர்கிறது. இவை பார்ப்பதற்கு தாமரை போன்ற வடிவத்தில் இருப்பதால் இதனை கடல் தாமரை என்று மீனவர்கள் அழைக்கின்றனர்.

ஒரு செ.மீ. முதல் 2 மீட்டர் வரையிலும் வளரக்கூடிய கடல் தாமரை சீ அனிமோன் (sea anemone) என்ற ஆங்கில பெயராலும், ஆக்டினாய்டியா என விலங்கியல் பெயராலும் அழைக்கப்படுகிறது.

கடல் தாமரைக்கு குழாய்கள் போன்ற இதழ்களுடன் உடலின் நடுப்பகுதியில் உள்ள வயிறு இணைந்திருப்பதால் தனது வர்ண இதழ்களால் தனது இரையை கவர்ந்து இழுத்து பின்னர் திரவத்தை பீய்ச்சி அடித்து அப்படியே விழுங்கிவிடுகிறது. ஆண் உறுப்புகளும், பெண் உறுப்புகளும் ஒருசேர அமைந்து கடல் தாமரைகள் இருபால் உயிரினமாக விளங்குகின்றன.

பாசிகள், கடல் குதிரை, கடல் பஞ்சு, சிறிய மீன், இறால், நண்டுகளுக்கு கடல் தாமரைகள் தஞ்சம் அளிக்கின்றன. மேலும் கடல் தாமரையில் இருந்து மருந்துகள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ராமேசுவரம் மரைக்காயர்பட்டினத்தில் உள்ள மத்திய கடல் சார் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதாவது:

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் தாமரைகளை சேகரிப்பதற்கு தடை உள்ளது. ஆனாலும் விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி வலைகளில் கடல் தாமரைகள் சிக்கி இறந்துவிடுகின்றன. இதனால் கரைக்கு வந்ததும் வலையில் சிக்கிய கடல் தாமரைகளை மீனவர்கள் தூக்கி எறிந்துவிடுகின்றனர். வலைகளில் கடல் தாமரைகள் சிக்கினால் உடனே கடலிலேயே விட்டுவிடுமாறு மீனவர்களிடம் அறிவுறுத்தப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x