Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM

மத்திய வனத்துறை அதிகாரி குடும்பத்துடன் சத்தியமூர்த்தி பவனில் தீக்குளிக்க முயற்சி

சத்தியமூர்த்தி பவனில் மத்திய வனத்துறை அதிகாரி குடும்பத்துடன் தீக்குளிக்கப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பெயரைச் சொல்லி, அதிகாரிகளும் முன்னாள் எம்எல்ஏவின் உதவியாளரும் ரூ.33 லட்சம் மோசடி செய்ததாக அவர் புகார் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாணவர் காங்கிரஸுக்கான இணையதள திறப்பு நிகழ்ச்சி, சனிக்கிழமை காலை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மற்றும் நூற்றுக்கணக்கான காங்கிரஸார் வந்திருந்தனர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வேகமாக சத்தியமூர்த்தி பவன் வளாகத்துக்கு வந்தார். அவரது கையில் மண்ணெண்ணெய் கேன் இருந்தது. குடும்பத்துடன் தீக்குளிக்கப் போவதாக கூறிக் கொண்டு பவனுக்குள் நுழைய முயன்றார். இதைக் கேட்டதும், அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், அவரை தடுத்து நிறுத்தி, மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை மனு அளிப்பதற்காக பவனுக்குள் அனுமதித்தனர்.

அவரிடம் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் விசாரணை நடத்தி, மனுவை பெற்றுக் கொண்டார். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தார்.

பின்னர் நிருபர்கள் விசாரித்தபோது, தனது பெயர் செல்வதாஸ் என்றும் மத்திய வனத்துறையில் மிருகவதை தடுப்பு பிரிவின் சிவகங்கை மாவட்ட தலைமை ஆய்வாளராக இருப்பதாகவும் கூறினார். அவர் அளித்த பேட்டி:

மிருகவதை தடுப்புப் பிரிவில் புதிய ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியதாக செய்திகள் வந்தன. எங்கள் துறையில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியாற்றும் பவானி பாபு, ரயில்வே டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் பிரபாகரன் ஆகியோர் என்னை அணுகி, தங்களுக்கு மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனை நன்றாக தெரியும் என்றும், புதிய பணி நியமனத்துக்கு ஆட்களை சேர்க்குமாறும் கூறினர்.

பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரி தேவியின் தம்பி யுவராஜை சந்திக்க வைத்தனர். அவர், காயத்ரி தேவியின் உதவியாளர் தீனாவை அறிமுகம் செய்து வைத்து, அவர் சொல்வதுபோல் நடந்து கொள்ளச் சொன்னார். தீனா, பிரபாகரன் மற்றும் பவானிபாபு ஆகியோர் கூறியபடி, 33 பேரிடம் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 33 லட்சம் வசூலித்தேன். அதை 2012 ஜூலையில் மூன்று பேர் முன்னிலையில் பவானிபாபுவிடம் கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டு இதுவரை யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. இதனால், பணம் கொடுத்தவர்கள் என்னையும் என் குடும்பத்தையும் மிரட்டுகின்றனர்.

இதுகுறித்து, கடந்த செப்டம்பர் 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தேன். அதன் மீது நடவடிக்கை இல்லாததால் காங்கிரஸ் தலைவர்களைப் பார்த்து முறையிட வந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, காயத்ரி தேவியின் உதவியாளர் தீனாவை வரவழைத்து ஞானதேசிகன் விசாரணை நடத்தினார். பின்னர் வெளியே வந்த தீனா, நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இதில் அமைச்சருக்கோ, முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரி தேவிக்கோ அல்லது எனக்கோ தொடர்பு கிடையாது. வேலை வாங்குவது தொடர்பாக எங்களை அணுகியபோது, அவர்களிடம் ஏற்கனவே முடியாது என்று கூறிவிட்டோம். அவர்களாக பணம் வசூலித்திருக்கலாம். தேவையில்லாமல் அமைச்சர் பெயரையும் காயத்ரி பெயரையும் கூறி திசை திருப்புகின்றனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x