

கடலின் மேல்பரப்பு, ஆழ்கடல் என இரண்டு கட்டமாக சோதனை நடத்தியும் மாயமான விமானம் குறித்த தகவல்கள் கிடைக்காததால், 3-ம் கட்டமாக தீவிர சோதனை நடத்த ‘சாகர்நிதி’ கப்பல் மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளது. இதில், ஆளில்லா ரிமோட் வாகனத்தைப் பயன்படுத்தி, ஆழ்கடலின் தரை வரை சென்று சோதனை நடத்த ராணுவ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து அந்த மானுக்கு ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் 29 பேருடன் கடந்த ஜூலை 22-ம் தேதி புறப்பட்டுச் சென்றது. நடுவானில் பறந்தபோது அந்த விமானம் திடீரென மாயமானது. விமானத்தை தேடும் பணியில் போர்க் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், இதில் நம்பகமான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, கடலின் மேல் பரப்பில் தேடும் பணி கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டு, கடலுக்கு அடியில் தேடும் பணி தொடங்கப்பட்டது. இதில், தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்கு சொந்தமான ‘சாகர்நிதி’, மத்திய புவியியல் ஆராய்ச்சி துறைக்குச் சொந்தமான ‘சமுத்ர ரத்னாகர்’ ஆகிய 2 ஆராய்ச்சிக் கப்பல்கள், ‘நிருபக்’ என்ற கடற்படை கப்பல், ஒரு நீர்மூழ்கி கப்பல் என 4 கப்பல்கள் ஆழ்கடலில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
பின்னர், நவீன வசதிகள் கொண்ட சாகர்நிதி கப்பல் மட்டும் கடலுக்கு அடியில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மற்ற கப்பல்கள் விடுவிக்கப்பட்டன. சாகர்நிதி நடத்திய தேடுதல் பணியில், கடலுக்கு அடியில் சந்தேகப்படும் விதத்தில் 54 பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதில் 29 பொருட்கள் விமானத்தின் பாகங்கள் இல்லை என்பது ஆராய்ச்சி மூலம் உறுதி செய்யப்பட்டது. மற்ற 25 பொருட்கள் மாயமான விமானத்தின் பாகங்களா என்பதை உறுதி செய்ய, அந்த இடங்களில் மறு ஆய்வு நடத்தப்பட்டது. அதிலும் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து, தேடுதல் பணி கடந்த 3-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. ஆழ்கடலில் தேடுதலில் ஈடுபட்டி ருந்த சாகர்நிதி கப்பல் கரை திரும்பியது.
இதற்கிடையில், கடலின் மேல்பரப்பு, ஆழ்கடல் என இரண்டு கட்டமாக தேடியும், முக்கிய தகவல்கள் கிடைக்கவில்லை என்ப தால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ராணுவ அதிகாரிகள் சென்னையில் கடந்த 1-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில், சாகர்நிதி கப்பலில் மேலும், அதிநவீன கருவிகள் பொருத்தி 3-ம்கட்ட தேடுதலில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடலுக்குள் தங்கி தேடுவதற்கு வசதியாக உணவுப் பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவை சாகர்நிதி கப்பலில் கடந்த 2 நாட்களாக ஏற்றப்பட்டன. இந்த பணி நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்தது. அதைத் தொடர்ந்து சாகர்நிதி கப்பல் நேற்று மீண்டும் கடலுக்குள் சென்றது. 3-ம் கட்ட தேடுதலில், ஆழ்கடலின் தரை வரை சென்று சோதனை நடத்தும் ஆளில்லா ரிமோட் வாகனத்தைப் பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.