

புதிய குடும்ப அட்டை கோரும் விண்ணப்பங்கள் தொடர்பாக உரிய தலத் தணிக்கை மேற்கொண்டு தகுதியான குடும்பங்களுக்கு 60 நாட்களுக்குள் குடும்ப அட்டைகளைத் தவறாமல் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உணவு அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.
பொது விநியோகத் திட்டச் செயல்பாடுகள் குறித்து மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. அப்போது அமைச்சர் பேசியதாவது:
31.10.2013 நிலவரப்படி புதிய குடும்ப அட்டை வேண்டி 59,154 மனுக்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளன.இவற்றின் மீது உடனடி தலத் தணிக்கை மேற்கொண்டு தீர்வு செய்யப்பட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலை அங்காடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, போலி குடும்ப அட்டைகளைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஜனவரி 2013 முதல் அக்டோபர் 2013 வரை சுமார் 1,06,753 போலி குடும்ப அட்டைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 1.6.2011 முதல் 31.10.2013 வரை 8,26,707 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.