Published : 04 Jan 2016 08:20 AM
Last Updated : 04 Jan 2016 08:20 AM

வேலூர் கூட்டுக் குடிநீர் உட்பட ரூ.2,559 கோடியிலான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னையில் ரூ.1,141 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்

*

வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் உட்பட தமிழகம் முழுவதும் ரூ.2,559 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். சென்னையில் ரூ.1,141 கோடிக்கான திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, அரக்கோணம் உள்ளிட்ட 11 நகராட்சிகள், நாட்றம்பள்ளி, பள்ளிகொண்டா உட்பட 5 பேரூராட்சிகள், 944 வழியோர குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.1,225 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

மதுரை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ரூ.841.75 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 3 கூட்டுக் குடிநீர் திட்டங்கள், காஞ்சிபுரம், கோவை, கடலூர், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள், சேலம் மாநகராட்சியில் தனி குடிநீர் வழங்கல் திட்டம், தூத்துக்குடி, தஞ்சை, வேலூரில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் திருச்சி, மதுரை விரிவாக்கம், ஈரோடு, திருப்பூர், வேலூர், சேலம் மாநகராட்சிகள் மற்றும் திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டலத்துக்குட்பட்ட 15 நகராட்சிகளில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 675 எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்பட் டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரும் புதூர், தாம்பரம் பல்லாவரம் நகராட்சிக்காக வேங்கடமங்கலம் ஆகிய இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மதுரை, ஈரோடு மாநகராட்சிகள், ஒசூர், மறைமலைநகர், ஆற்காடு, பவானி, தருமபுரி நகராட்சிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அலுவலக கட்டிடங்கள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், வெள்ள தடுப்புச் சுவர், சேலம், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மீன் அங்காடி, உயரி எரிவாயு கூடங் கள், குடியிருப்புகள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

மேலும் முசிறி, சுவாமிமலை, சோளிங்கர், பனப்பாக்கம், பள்ளிப் பட்டு, இலுப்பூர், பொன்னமராவதி பேரூராட்சிகளில் சுகாதார வளாகங் கள், யாத்திரிகர்கள் தங்கும் அறை, நவீன இறைச்சிக் கூடம், பேருந்து நிலையங்கள் உட்பட மொத்தம் ரூ.2,559 கோடியே 77 லட்சம் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

சென்னை மாநகராட்சி எல்லையில் 108.43 கி.மீ. நீள பேருந்து தடம் மற்றும் 683.02 கி.மீ. நீள உட்புறச் சாலைகளை ரூ.643 கோடியே 50 லட்சத்தில் மேம்படுத்தும் பணிகளையும் முதல்வர் தொடங்கிவைத்தார். சென்னை மாநகராட்சி சார்பில் 260 கி.மீ. நீள ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், 15 மண்டலங்களில் ரூ.48 கோடியில் 400 பேருந்து பயணிகள் நிழற்குடைகள் என மொத்தம் ரூ.1,141.64 கோடி மதிப்பிலான திட்டப் பணிளுக்கு அடிக்கல் நாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x