Published : 31 Dec 2015 03:07 PM
Last Updated : 31 Dec 2015 03:07 PM

சட்டப்பேரவைத் தேர்தலில் சூழலுக்கு ஏற்ப வியூகம் அமைத்து முடிவு எடுப்பேன்: அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா பேச்சு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப வியூகங்கள் வகுத்து சரியான முடிவை எடுப்பேன் என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.

சென்னை திருவான்மியூரில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பேசியது:

கடந்த நான்கரை ஆண்டு காலமாக, குறை காண முடியாத அளவுக்கு நிறைவான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் தங்கள் கற்பனைக்கு தோன்றிய பொய்களை எல்லாம் கட்டவிழ்த்து; எப்படியாவது நமது கழக அரசு மீது களங்கம் கற்பிக்க முயன்று வருகின்றனர்.

அண்மையில் பெய்த பெருமழை, தமிழகத்தை குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களை மிகப்பெரும் அளவில் பாதித்துள்ளது.

இந்த மழை கடந்த 100 ஆண்டுகளில் கண்டிராத மிகப் பெரும் மழை. எனவே தான் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மிக அதிகம். இந்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனது அரசு மேற்கொண்டு வருகிறது.

பொதுக்குழு தீர்மானத்தின்படி, வரும் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு எனக்கு நீங்கள் முழு அதிகாரம் அளித்துள்ளீர்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை நான் அமைத்து வருகிறேன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

தேர்தல் களத்தில் வெற்றி பெற நாம் பல்வேறு உத்திகளை கடைபிடிக்க வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் விதமாக

நாம் உத்திகளை வகுக்க வேண்டும். தேர்தலை சந்திப்பதற்கு எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய உத்தி என்று எதுவும் கிடையாது. இந்த அடிப்படையில் தான் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டோம்.

2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டோம். 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலில் தனித்தே போட்டியிட்டு 37 இடங்களை வென்று, இன்று மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரை பெற்றுள்ளோம். அதே போன்று, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நான் சரியான முடிவை எடுப்பேன்.

வரும் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் தமிழக மக்களுக்கு சேவை புரிய ஆட்சி அமைத்திட வேண்டும். அதற்கு கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் இப்போதிருந்தே நம்மிடம் உள்ள வேற்றுமைகளைக் களைந்து களப் பணி ஆற்றிட வேண்டும்.

நமது அரசு ஆற்றியுள்ள அரும் பணிகள், ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் தெளிவாக நீங்கள் விளக்கிட வேண்டும். எதிர்க்கட்சிகள் நம் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் பொய்களை மக்கள் நம்பும்படி சொல்வார்கள். அவற்றை நீங்கள் உடனுக்குடன் முறியடிக்க உண்மை எது என்பதை மக்களுக்கு விளக்கிட வேண்டும்.

முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை மக்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

நமது எண்ணங்கள் தூய்மையானது; நமது செயல்கள் மக்கள் நலன் சார்ந்தது; எனவே நமது வெற்றியும் நிலையானது; உறுதியானது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று நாம் அனைவரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதைப் போலவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள்; உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் கழக வீரன் என்பதைச் சொல்ல வேண்டும்; பெருமைப்பட வேண்டும். கழக வீராங்கனை என்று சொல்ல வேண்டும்; பெருமைப்பட வேண்டும். இது சாதாரணமான இயக்கம் அல்ல. எத்தனையோ இயக்கங்கள் இருக்கலாம். எத்தனையோ கட்சிகள் இருக்கலாம். ஆனால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மக்கள் இயக்கத்திற்கு ஒரு தனி வரலாறு உண்டு. ஒரு தனி பெருமை உண்டு.

இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அனைவரும் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும். நான் சொல்கிறேன்; இன்று சொல்கிறேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதுவரை இந்த இயக்கம் 6 முறை ஆட்சி அமைத்திருக்கிறது. தேர்தலில் வென்று எம்.ஜி.ஆர். தலைமையின் கீழ் மூன்று முறை ஆட்சி அமைத்துள்ளது. எனது தலைமையின் கீழ் மூன்று முறை ஆட்சி அமைத்துள்ளது. 6 முறை தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த இயக்கம் இது.

நான் சொல்கிறேன். இனிமேல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றி தான்; என்றுமே வெற்றி தான். இனி எந்தக் காலத்திலும் தோல்வி இல்லை. வெற்றி தான். இனி எந்தக் காலத்திலும் சிறுமை இல்லை; பெருமை தான். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று ஜெயலலிதா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x